

பெங்களூரு விதானசவுதாவில் நேற்று மாலையில் முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
கர்நாடக மந்திரிசபை கூட்டம் கடந்த 16-ந்தேதி நடைபெற இருந்தது. அன்றைய தினம் நான் டெல்லியில் இருந்ததால் மந்திரிசபை கூட்டம் நடைபெறவில்லை. இதனால் நாளை (அதாவது இன்று) மதியம் 3 மணிக்கு அவசர மந்திரிசபை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மந்திரிசபை கூட்டத்தில் மாநிலத்தில் நிலவும் வறட்சி குறித்தும், இந்த விவகாரத்தில் அடுத்தகட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் விரிவாக ஆலோசிக்க உள்ளோம்.
வறட்சி குறித்து மந்திரிசபை மற்றும் மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசிக்கப்படும். மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு நடத்தப்படும். அதன்பிறகு, மத்திய அரசுடன், மாநிலத்தில் நிலவும் வறட்சி குறித்து தெரிவிக்கப்படும். மாநிலத்தில் நிலவும் வறட்சி குறித்து மத்திய அரசுக்கு இதுவரை எந்த கடிதமும் எழுதவில்லை. மாநிலத்தில் எந்தெந்த மாவட்டங்களில் வறட்சி உள்ளது. வறட்சியால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து மத்திய அரசுக்கு தெரிவிக்கப்படும்.
தற்போது மாநிலத்தில் உள்ள அணைகளில் இருப்பு இருக்கும் தண்ணீரை, குடிநீருக்கு மட்டும் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரும், குடிநீர் தேவைக்காக மட்டுமே ஆகும். இப்போதும் சொல்கிறேன், விவசாயத்துக்கு தண்ணீரை பயன்படுத்த வேண்டாம். விவசாய தேவைக்காக அணைகளில் எவ்வளவு தண்ணீர் உள்ளது என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
அதற்கு முன்பாக அரசுக்கு விவசாயிகள் அழுத்தம் கொடுக்க வேண்டும். குடிநீருக்காக தான் அணைகளில் தண்ணீர் திறந்து வருகிறோம். காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடும்படி அதிக அழுத்தம் இருக்கிறது. துங்க பத்ரா அணையில் இருந்து தண்ணீர் திறக்க அழுத்தம் இருக்கிறது. அணைகள் நிரம்பினால் தண்ணீர் கொடுப்போம். அப்போது எந்த தொந்தரவும் ஏற்படாது.
காவிரி நதிநீர் விவகாரம்பற்றி பேச விரும்பவில்லை. அதுபற்றி நிறைய பிரச்சினை இருக்கிறது. அதனால் காவிரி நதிநீர் குறித்து விவாதிக்க விரும்பவில்லை. காவிரி நீர் நமது உரிமை. மேகதாது விவகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு கூட தீர்ப்பு கூறியுள்ளது. மேகதாதுவில் அணை கட்டுவதால் தமிழ்நாட்டுக்குதான் உதவியாக இருக்கும் என்பதை மீண்டும் சொல்லி கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.