விமான எரிபொருள் விலை 2 மடங்கு அதிகரிப்பு - விமான கட்டணம் உயர வாய்ப்பு

விமான எரிபொருளின் விலை ரூ.2 லட்சத்தை கடப்பது இதுவே முதல் முறை ஆகும்.
விமான எரிபொருள் விலை 2 மடங்கு அதிகரிப்பு - விமான கட்டணம் உயர வாய்ப்பு
Published on

புதுடெல்லி:

உலக வர்த்தகத்தில் மிக முக்கிய கடல்வழி பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால் இந்தியாவில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இதனால் சமையல் கியாஸ் சிலிண்டர், டீசல், பெட்ரோல் உள்ளிட்டவைகளின் விலையும் கணிசமாக உயர்ந்தது.

இந்த நிலையில் மேற்கு ஆசிய போரின் எதிரொலியாக விமான எரிபொருளின் விலை 2 மடங்கு உயர்ந்து உள்ளது.

இன்று முதல் 1 கிலோ லிட்டருக்கு ரூ.2.07 லட்சம் என்ற புதிய உச்சத்தை எட்டி உள்ளது. விமான எரிபொருள் சில்லறை விற்பனையாளர்கள் வெளியிட்டுள்ள தகவலின்படி டெல்லியில் விமான டர்பைன் எரிபொருளின் விலை ஒரு கிலோ லிட்டருக்கு ரூ.1,10,703-லில் இருந்து ரூ.2,07,341 ஆக உயர்ந்து உள்ளது.

விமான எரிபொருளின் விலை ரூ.2 லட்சத்தை கடப்பது இதுவே முதல் முறை ஆகும்.

இதற்கு முன்பு 2022-ம் ஆண்டில் உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்தபோது கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. அப்போது ஒரு கிலோ லிட்டர் விலை ரூ.1.1 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது.

இந்த ஆண்டில் 2-வது முறையாக விமான எரிபொருள் விலை உயர்ந்து உள்ளது. கடந்த 1-ந்தேதி கிலோ லிட்டருக்கு 5.7 சதவீதம் (ரூ.5244)உயர்த்தப்பட்டது.

அமெரிக்க-ஈரான் போர், ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி ஆகியவற்றால் விமான எரிபொருள் கடுமையாக உயர்ந்து உள்ளது. இதனால் விமான கட்டணம் அதிகரிக்கும் என்ற அச்சம் எழுந்து உள்ளது. ஒரு விமான நிறுவனத்தின் இயக்க செலவில் சுமார் 40 சதவீதம் எரிபொருளாகும்.

இதற்கிடையே டெல்லியில் பிரீமியம் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. எக்ஸ்.பி. 100-ன் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.149-ல் இருந்து 160 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

பிரீமியம் டீசல் ரூ.91.49-ல் இருந்து ரூ.92.99 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com