

பூமியின் சொர்க்கம் என்று அழைக்கப்படும் ஜம்மு காஷ்மீரின் மலைப்பகுதிகள், கடந்த 20 ஆண்டுகளில் சுமார் வரை 1°C வரை வெப்பமடைந்துள்ளதாக அதிர்ச்சியூட்டும் ஆய்வுத் தகவல் வெளியாகியுள்ளது. கரக்பூர் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட புதிய ஆய்வில் இந்த விபரம் தெரியவந்துள்ளது.
ஐஐடி கரக்பூரின் 'கடல், நதி, வளிமண்டலம் மற்றும் நில அறிவியல் மையத்தை' சேர்ந்த பேராசிரியர்கள் ஜெயநாராயணன் குட்டிப்புரத், ஜி.எஸ்.கோபிகிருஷ்ணன் மற்றும் வி.எம்.பிரணவ் சந்திரன் ஆகியோர் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.
"1980 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் ஜம்மு காஷ்மீரின் காலநிலை மாற்றம்" என்ற தலைப்பில் நடத்தப்பட்ட இந்த விரிவான ஆய்வு, உலக புகழ்பெற்ற 'சயின்டிஃபிக் ரிப்போர்ட்ஸ்' இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 10 முக்கிய நிலையங்களின் தரவுகளைக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
இந்த ஆய்வறிக்கையின்படி, காஷ்மீரின் சமவெளிப் பகுதிகளை (உதாரணமாக ஜம்மு) விட குல்மார்க், பஹல்காம், பாதர்வா போன்ற உயரமான மலைப்பிரதேசங்கள் மிக வேகமாக வெப்பமடைந்து வருகின்றன.
இதனை அறிவியல் பூர்வமாக 'உயரம் சார்ந்த வெப்பமயமாதல்'என்று அழைக்கின்றனர். சில நடுத்தர உயரமுள்ள பகுதிகளில் சராசரி வெப்பநிலை ஒரு தசாப்தத்திற்கு (10 ஆண்டுகளுக்கு) 0.3 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்துள்ளது.
பகல் நேர வெப்பநிலையை விட, இரவு நேர குறைந்தபட்ச வெப்பநிலை மிக வேகமாக அதிகரித்து வருவது இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, பருவமழைக்கு முந்தைய காலங்களில் இரவின் வெப்பநிலை ஒரு தசாப்தத்திற்கு 0.6 டிகிரி செல்சிஸ் வரை உயர்ந்துள்ளது.
இரவில் இயல்பான குளிர்ச்சி குறையும் போது, பனி மற்றும் பனிப்பாறைகள் உறைந்து நீடிக்கும் தன்மை பலவீனமடைகிறது என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
மலைப்பகுதிகளில் பனிப்பொழிவு குறைவதால் நிலத்தின் மேற்பரப்பு சூரியக் கதிர்களைப் பிரதிபலிக்கும் திறன் குறைகிறது. இதனால் இருண்ட நிலப்பரப்பு அதிக வெப்பத்தை உறிஞ்சி, பனி உருகும் வேகத்தை மேலும் பல மடங்கு அதிகமாக்குகிறது. வளிமண்டலத்தில் அதிகரித்து வரும் ஈரப்பதமும் புவியின் வெப்பத்தை விண்வெளிக்குச் செல்லவிடாமல் தடுத்து இரவை வெப்பமாக்குகிறது.
தற்போது 2026 ஜூலை மாத நிலவரப்படி, புகழ்பெற்ற அமர்நாத் யாத்திரையின் போதே 'பாபா பர்பானி' எனப்படும் பனிலிங்கம் அதன் காலத்திற்கு முன்பே முழுமையாக உருகியதற்கும் இந்த இமயமலை பிராந்திய வெப்பமயமாதலே முக்கியக் காரணம் என்று பேராசிரியர் ஜெயநாராயணன் குட்டிப்புரத் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தத் தீவிர வெப்பநிலை உயர்வால் இமயமலைப் பிராந்தியத்தில் உள்ள பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன. இதனால், சிந்து நதி உள்ளிட்ட இமயமலை நதிகளை மட்டுமே நம்பி வாழும் வட இந்தியா மற்றும் அண்டை நாடுகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான மக்களின் குடிநீர் பாதுகாப்பு, விவசாயம் மற்றும் வாழ்வாதாரத்திற்குப் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக இந்த ஆய்வு எச்சரிக்கிறது.
மேலும் திடீர் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு மற்றும் மேகவெடிப்பு போன்ற இயற்கை பேரிடர்கள் அதிகரிக்கக்கூடும் என்பதால், உடனடியாக மலைப்பகுதி காலநிலை கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.