அரசு வேலைக்காக பெற்ற தாயையே கார் ஏற்றி கொன்ற 23 வயது மகள்! ஜெய்ப்பூரில் அரங்கேறிய கொடூரம்!

சாதாரண விபத்து என்று நினைத்த போலீசாருக்கு CCTV கொடுத்த பேரதிர்ச்சி!
JaipurMurderCase
Published on

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சொத்து மற்றும் அரசு வேலைக்கு ஆசைப்பட்டு, 23 வயது இளம்பெண் ஒருவர் தனது சொந்த தாயையே 7 லட்சம் ரூபாய்க்கு கூலிப்படை வைத்து கார் ஏற்றி படுகொலை செய்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சாதாரண சாலை விபத்து போல ஜோடிக்கப்பட்ட இந்த கொலையை ஜெய்ப்பூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி முறியடித்துள்ளனர்.

விபத்து அல்ல... திட்டமிட்ட படுகொலை!

கடந்த ஜூலை 3 ஆம் தேதி, ஜெய்ப்பூரின் பிரதாப் நகர் பகுதியில் 45 வயதான நீரஜ் சர்மா என்ற பெண் தனது மகனை பயிற்சி மையத்தில் விட்டுவிட்டு ஸ்கூட்டரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அதிவேகமாக வந்த கார் ஒன்று சர்மா மீது பயங்கரமாக மோதியது.

சுமார் 130 கி.மீ வேகத்தில் மோதிய அந்த மோதலின் தாக்கத்தால், நீரஜ் 100 அடி தூரம் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காரை ஓட்டி வந்த நபர் அங்கிருந்து தப்பியோடினார்.

ஆரம்பத்தில் இது ஒரு சாதாரண விபத்து என்று கருதப்பட்டாலும், நீரஜின் சகோதரர் ராகேஷ் குமார் அளித்த புகாரின் பேரில் போலீசார் அங்குள்ள CCVT காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, அது தற்செயலான விபத்து அல்ல, பல நாட்களாக நீரஜை பின்தொடர்ந்து திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை என்பது அம்பலமாகியுள்ளது.

வேலை மற்றும் சொத்து பேராசை..

போலீசார் விசாரணையில் இந்த கொலையின் பின்னணியில் இருந்த அதிர்ச்சி உண்மைகள் வெளியாகின.

உயிரிழந்த நீரஜ் சர்மாவின் கணவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு இறந்துவிட்டார். அவர் நீதிமன்றத்தில் எழுத்தாளராக பணியாற்றி வந்ததால், அவரது மறைவுக்குப் பின் கருணை அடிப்படையில் அந்த அரசு வேலை மனைவி நீரஜ் சர்மாவுக்கு கிடைத்தது.

ஆனால், தந்தை இறந்தவுடன் அந்த அரசு வேலை தனக்குத்தான் கிடைக்க வேண்டும் என்று அவரது 23 வயது மகள் ஆயுஷி சர்மா பிடிவாதமாக இருந்துள்ளார். இதோடு மட்டுமில்லாமல், குடும்ப சொத்துக்களை கைபற்றுவதிலும் தாய்க்கும் மகளுக்கும் இடையே கடந்த 2-3 ஆண்டுகளாகவே கடுமையான தகராறு இருந்து வந்துள்ளது.

தாயைக் கொன்றுவிட்டால் அந்த அரசு வேலை மீண்டும் கருணை அடிப்படையில் தனக்கு கிடைக்கும் என மகள் ஆயுஷி கணக்கு போட்டுள்ளார்.

7 லட்சத்திற்கு ஒப்பந்தம்: 3 மாத சதித்திட்டம்

தாயை ஒழித்துக்கட்ட மகள் ஆயுஷி சர்மா, தனது சித்தப்பா மோகன் ஸ்வரூப் மற்றும் உறவினர் பல்ராம் ஆகியோருடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டினார். இதற்காக பரத்பூரைச் சேர்ந்த ஹேமந்த் சர்மா என்ற கூலிப்படைத் தலைவனுக்கு 7 லட்சம் ரூபாய் தருவதாக ஒப்பந்தம் பேசப்பட்டது.

முதலில் தார் காரைப் பயன்படுத்தி நீரஜைக் கொல்ல முயன்று அது தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, ஒரு மாத காலமாக நீரஜின் நடமாட்டத்தை நோட்டமிட்டு, இறுதியாக ஜூலை 3 அன்று 'ஸ்கார்பியோ' காரை வைத்து கொலையை அரங்கேற்றியுள்ளனர்.

கொலை நடந்த அன்று நீரஜின் இருப்பிடத்தை கூலிப்படைக்கு மொபைல் மூலம் ஆட்கள் உளவு சொல்லியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலையை முடித்த பின் காரை அங்கேயே போட்டுவிட்டு குற்றவாளிகள் தப்பி ஓடினர்.

7 பேர் கைது - போலீசார் அதிரடி..

இந்த கொடூரக் கொலை தொடர்பாக போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து, பெற்ற மகள் ஆயுஷி சர்மா, சித்தப்பா மோகன் ஸ்வரூப், கூலிப்படையை சேர்ந்த ஆகாஷ் சர்மா, அரவிந்த் சர்மா, ஹேமந்த் சர்மா உள்ளிட்ட 7 பேரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக செயல்பட்டு வந்த உறவினர் பல்ராம் தற்போது தலைமறைவாக இருப்பதால், அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com