

மேற்கு ஆசியாவில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், பாரசீக வளைகுடா, ஹார்முஸ் நீரிணை மற்றும் ஓமன் வளைகுடா ஆகிய பகுதிகளில், இந்திய சரக்கு கப்பல்களில் மாலுமிகளுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் ஒரு நடவடிக்கைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஹார்முஸ் நீரிணையில் இரண்டு வர்த்தகக் கப்பல்கள் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் கடல்சார் பாதுகாப்பு நெருக்கடிக்கு மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எம்.டி. அல் பஹியா மற்றும் எம்.டி. மொம்பாசா ஆகிய கப்பல்களில் 30 பேர் இந்திய மாலுமிகள் பயணம் செய்தனர்.
மேலும் இந்த எம்.டி. அல் பஹியா கப்பல் மீதான தாக்குதலில் இந்திய மாலுமியான ரோகன் குமார் உயிரிழந்தார். அதேபோன்று, எம்.டி. மொம்பாசா கப்பலில் இருந்த ஒன்பது இந்தியர்கள் காயமடைந்தனர், அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இந்நிலையில் கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் இதுகுறித்தான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிவிப்பில் அவர், “இந்த இரண்டு தாக்குதல்களில், நமது துணிச்சலான மாலுமிகளில் ஒருவரை துரதிர்ஷ்டவசமாக இழந்தது வேதனை அளிக்கிறது. துயரத்தில் வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதைத்தொடர்ந்து அவர் வெளியிட்ட உத்தரவில், “பாரசீக வளைகுடா, ஹார்முஸ் நீரிணை மற்றும் ஓமன் வளைகுடா ஆகிய பகுதிகளில் இயங்கும் ஒவ்வொரு கப்பலிலும், அவற்றின் கொடிகளை பொருட்படுத்தாமல், ஒவ்வொரு இந்தியரையும் கணக்கிடுவதற்காக கப்பல் வாரியாக ஒரு விரிவான கடுப்பாட்டு டாஷ்போர்டு நிறுவ கப்பல் போக்குவரத்து தலைமை இயக்குநரகத்திற்கு உத்தரவிடப்படுகிறது.
கடலில் உள்ள இந்திய கப்பல் பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வதற்காக, இந்த முன்னெடுப்பு ஒரு முழுமையான அரசு அணுகுமுறையைக் கையாள்கிறது.
கப்பலின் நிலை, உரிமையாளர், சரக்கு, பணியாளர்களின் எண்ணிக்கை, பணியாளர்களின் நலன், அச்சுறுத்தல் மதிப்பீடு, திட்டமிடப்பட்ட பயணம், அடுத்ததாகச் செல்லவிருக்கும் துறைமுகம் மற்றும் வசதிகளின் கிடைக்கும் தன்மை ஆகியவை குறித்த நிகழ்நேரத் தகவல்களை இந்த டாஷ்போர்டு வழங்கும்” என்று கூறினார்.