

இந்தியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், இன்று டெல்லியில் கையெழுத்தானது. “இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் நன்மைகள் பரவலானவை," என்று நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் இந்தியாவிலிருந்து நியூசிலாந்துக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு (சுமார் 8,284 பொருட்கள்) 100% நியூசிலாந்து அரசு இறக்குமதி வரி விலக்கு அளித்துள்ளது.
அதேபோல், நியூசிலாந்தின் சுமார் 70% முதல் 95% வரையிலான பொருட்களுக்கு இந்தியா வரி விலக்கு அல்லது வரி குறைப்பு வழங்கியுள்ளது. மருந்துகள், மருத்துவ சாதனங்கள், தோல் பொருட்கள், ஜவுளி, கைத்தறி மற்றும் பொறியியல் பொருட்கள் ஆகியவற்றை நியூசிலாந்துக்கு ஏற்றுமதி செய்வது இந்த ஒப்பந்தம் மூலம் கணிசமாக அதிகரிக்கும்.
ஐடி , பொறியியல், சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற துறைகளைச் சேர்ந்த 5,000 இந்தியப் பணியாளர்களுக்கு ஆண்டுதோறும் 3 ஆண்டுகள் செல்லத்தக்க வேலை விசாக்களை நியூசிலாந்து வழங்க உள்ளது.
மேலும் அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் $20 பில்லியன் (சுமார் ரூ.1.6 லட்சம் கோடி) முதலீடு செய்ய நியூசிலாந்து உறுதியளித்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு வர்த்தகத்தை இரட்டிப்பாக்க (சுமார் $5 பில்லியன்) இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில், இந்திய மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் நியூசிலாந்து வர்த்தக அமைச்சர் டோட் மெக்லே ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.