

ஹைதராபாத் பீர்சாடிகுடா பகுதியில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றி வந்த இளம்பெண் ஒருவர், நள்ளிரவில் நிர்வாணமாக ஓடி, அருகில் இருந்த கோயிலில் அம்மன் சிலையைத் தூக்கிக்கொண்டு ஏரியில் குதித்து தற்கொலை செய்துகொண்ட விசித்திரமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தின் விசியநகரம் மாவட்டத்தைச் சேர்ந்த தேஜஸ்வினி என்ற இளம் பெண், பெங்களூருவில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்தார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தனது வேலையை ராஜினாமா செய்த அவர், ஹைதராபாத் பீர்சாடிகுடா சங்கர் நகர் காலனியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தனது தாயாருடன் வசித்து வந்தார்.
நேற்று நள்ளிரவு சுமார் 2:30 மணியளவில், தேஜஸ்வினி திடீரென தனது தாயார் தூங்கிக்கொண்டிருந்த அறையை வெளிப்பக்கமாகப் பூட்டியுள்ளார். பின்னர், தனது ஆடைகள் அனைத்தையும் கழற்றிவிட்டு நிர்வாணமான நிலையில் வீட்டை விட்டு வெளியே ஓடியுள்ளார்.
அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை போலீஸார் ஆய்வு செய்தபோது அதிர்ச்சியூட்டும் காட்சிகள் வெளிவந்துள்ளன. நள்ளிரவில் நிர்வாணமாக ஓடிய தேஜஸ்வினி, அங்குள்ள பீரப்பா கோயிலில் நுழைந்துள்ளார். அங்கு கருவறையில் இருந்த அம்மாவாரு சிலையைக் கையில் எடுத்துக்கொண்டு, அருகில் இருந்த பீர்சாடிகுடா ஏரியை நோக்கி ஓடி, அதனுள் குதித்துள்ளார்.
இன்று அதிகாலை தேஜஸ்வினியின் தாயார் அருணா கண்விழித்தபோது, அறை வெளிப்பக்கமாகப் பூட்டப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அவரது அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த பக்கத்து வீட்டினர் கதவைத் திறந்துள்ளனர்.
வீட்டில் தேஜஸ்வினி இல்லாததால், தாயார் அவரைப் பல இடங்களில் தேடியுள்ளார். இதற்கிடையில், ஏரியில் ஒரு பெண்ணின் சடலம் மிதப்பது குறித்து போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த ஹைதராபாத் பேரிடர் மீட்புக்குழுவினர் ஏரியிலிருந்து தேஜஸ்வினியின் உடலை மீட்டனர்.
தேஜஸ்வினியின் உடல் மீட்கப்பட்ட போதிலும், அவர் கையில் எடுத்துச் சென்ற அம்மன் சிலை இன்னும் கிடைக்கவில்லை. பேரிடர் மீட்புப் படையினர் படகுகள் மூலம் ஏரிக்குள் இறங்கி அந்தச் சிலையைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த வழக்கின் முக்கிய ஆதாரமாக அச்சிலை கருதப்படுவதால் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பெண் ஐடி ஊழியர் ஏன் இந்த விபரீத முடிவை எடுத்தார், மனநல பாதிப்பு ஏதேனும் இருந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் மேடிபள்ளி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.