காஷ்மீரில் காலை முதல் தொடர் மழை- வெள்ளத்தில் சிக்கி 11 பேர் பரிதமாக உயிரிழப்பு!

ஜூலை 23 வரை தொடர்ந்து பெய்யும் மழை - வானிலை மையம் எச்சரிக்கை!
JammuKashmirFlashFloods
Published on

ஜம்மு காஷ்மீரின் எல்லை மாவட்டங்களான பூஞ்ச் மற்றும் ரஜௌரியில் இன்று காலை முதல் பெய்த மழையில் பெரு வெள்ளம் மற்றும் மேகவெடிப்பு காரணமாக கோர விபத்து ஏற்பட்டுள்ளது.

அங்குள்ள முக்கிய ஆறுகளில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிலும், நிலச்சரிவிலும் சிக்கி பெண்கள், குழந்தைகள் உட்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மேலும் பலர் வெள்ளித்தில் அடித்துச் செல்லப்பட்டு மாயமாகியுள்ளனர்.

பெருக்கெடுத்த ஆற்றுவெள்ளம்...

இன்று அதிகாலை முதலே கொட்டித்தீர்த்த மழையால் தர்ஹாலி, காண்ட்லி, சுக்தோ, ஜமோலா ஆகிய முக்கிய ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

சில நிமிடங்களிலேயே ஆற்று நீர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. ரஜௌரியின் புதிய பேருந்து நிலையம் வெள்ளத்தில் முற்றிலும் சிதைந்தது.

அங்கு நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு ஓடினர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மாயம்:

வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் வீடுகள் இடிந்து விழுந்து பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

வெள்ளத்தில் ஒரு வீடு ஒட்டுமொத்தமாக அடித்துச் செல்லப்பட்டதில் அப்துல் ஹமீது, அவரது மனைவி ஷரீபா பேகம், மகள் அரீபா, சகோதரி மனீரா ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மாயமாகியுள்ளனர்.

நூனாபந்தி கிராமத்தில் நாஜியா கௌசர் என்ற பெண் வீடு இடிந்து பலியானார். சுரான்கோட் பகுதியில் ஷாஜைப் அகமது என்ற வாலிபர் வீடு இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார்.

மார்ஹோட் ஆற்றுப் பகுதியில் இரம் என்ற சிறுமி வெள்ளத்தில் மூழ்கி பலியாகியுள்ளார். துந்தக் லாடூங் பாலம் அருகே அடையாளம் தெரியாத பெண்ணின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது.

அதிவிரைவு மீட்புப் பணிகள்..

பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவம், உள்ளூர் நிர்வாகம் மற்றும் பேரிடர் மீட்புக்குழுவினர் இணைந்து நள்ளிரவிலும் மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

நிலைமையை கவனித்து வருவதாகக் கூறியுள்ள ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, "மக்களின் உயிரைக் காப்பதே தற்போதைய முதன்மை நோக்கம். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு போர்க்கால அடிப்படையில் வழங்கும்" என உறுதியளித்துள்ளார்.

வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..

ஜம்மு காஷ்மீர் முழுவதும் வரும் ஜூலை 23 ஆம் தேதி வரை மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இதனால் பொதுமக்கள் ஆறுகள் மற்றும் மலைப் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும், அவசர உதவிக்காகப் பிரத்யேகக் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com