

மதுரா கிருஷ்ண ஜென்மபூமி - ஷாஹி இத்கா மசூதி தொடர்பான சர்ச்சையில், அலகாபாத் உயர் நீதிமன்றம் விசாரணையை ஆகஸ்ட் 25-ஆம் தேதி வரை ஒத்திவைத்தது.
மதுரா மாவட்ட நீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பாக சமரச பேச்சுவார்த்தை நடவடிக்கைகள் தொடங்கியுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட தரப்பினர் விடுத்த கூட்டு கோரிக்கையை ஏற்று இந்த ஒத்திவைப்பு மேற்கொள்ளப்பட்டது.
ஒத்திவைப்பு:
நீதிபதி அவனிஷ் சக்சேனா இதுகுறித்து குறிப்பிடுகையில், "மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, மதுரா மாவட்ட நீதிமன்றத்தில் சமரச பேச்சுவார்த்தை நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தரப்பினர் கூட்டாக தெரிவித்துள்ளனர். உச்ச நீதிமன்றத்தால் லோக் அதாலத் பணிகளுக்காக நிர்ணயிக்கப்பட்ட அடுத்த தேதிகள் ஆகஸ்ட் 21 முதல் ஆகஸ்ட் 23, 2026 வரை ஆகும். எனவே, கோரப்பட்டதற்கிணங்க வழக்கு ஒத்திவைக்கப்படுகிறது," என்று கூறினார்.
பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலான கூட்டங்கள், கார்ய சேவா அல்லது பிற நிகழ்ச்சிகளை நடத்த, வழக்குக்குரிய இடத்திற்குள் எவரும் அல்லது எந்த குழுவும் நுழைவதை தடுக்குமாறு மாநில அரசு மற்றும் நிர்வாகத்திற்கு உத்தரவிட கோரி, மனுதாரர்களில் ஒருவர் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
18 வழக்குகள்:
இந்த மனு மீதான ஆட்சேபனைகள் ஏதேனும் இருப்பின் அவற்றை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கேட்டுக்கொண்டது.
நிலத்தை கையகப்படுத்துதல், ஷாஹி இத்கா மசூதி கட்டமைப்பை அகற்றுதல், அத்துடன் கோயிலை 'மீண்டும் அமைத்தல்' மற்றும் நிரந்தர தடை உத்தரவு பெறுதல் ஆகியவற்றுக்காக இந்து தரப்பினர் 18 வழக்குகளை தொடர்ந்துள்ளனர்.
இந்த சர்ச்சை மதுராவில் உள்ள முகலாயப் பேரரசர் ஔரங்கசீப் காலத்து ஷாஹி இத்கா மசூதி தொடர்பானது; பகவான் கிருஷ்ணரின் பிறந்த இடத்தில் இருந்த கோயிலை இடித்துவிட்டு இந்த மசூதி கட்டப்பட்டதாக சிலர் குற்றம் சாட்டுகின்றனர்.