

வயநாடு கல்லடியில் ஏற்பட்ட நிலச்சரிவின்போது மழை வெள்ளத்தோடு மண் அடித்து வந்தபோது அங்கு நின்ற டேங்கர் லாரியும் தள்ளி கொண்டு வரப்பட்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தின்போது அந்த லாரியின் அடியில் இருவர் சிக்கிய நிலையில் அவர்கள் உயிர் பிழைத்த சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.
அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அவர்கள் கணவன்-மனைவி என்பதும், அவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.
மதுரையை பூர்வீகமாக கொண்ட பால்ராஜ்-கூடம்மாள் தம்பதியினர் தோட்டத் தொழிலாளர்களாக வயநாடு மாவட்டம் மேம்பாடியில் வேலை பார்த்து வருகின்றனர்.
நிலச்சரிவு ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து மீண்ட அவர்கள் கூறியதாவது:-
நாங்கள் வங்கிக்கு செல்வதற்காக சுரங்கப் பாதைக்கு முன்னால் உள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தோம். அப்போது கனமழை பெய்தது.
அந்த நேரத்தில் திடீரென பயங்கர இரைச்சலுடன் நிலச்சரிவு ஏற்பட்டது. நாங்கள் திரும்பி பார்த்தபோது முழு மலையுமே சரிந்து கொண்டிருந்தது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்து நாங்கள் கைகோர்த்துக்கொண்டு பின்னோக்கி ஓடினோம். அந்த நேரத்தில் டேங்கர் லாரி குலுங்கியபடி எங்களை துரத்தி வருவது போல் இருந்தது. அதில் இருந்து தப்பிக்க ஓடும்போது தவறி விழுந்து விட்டோம். இருப்பினும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினோம். சாவின் விளிம்புவரை சென்று மீண்டும் உயிர் பெற்றுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் உள்ள ஒரு ஓட்டலின் மேலாளர் ஆஷிக் கூறுகையில், ‘ஒரு பெரிய சத்தம் கேட்டு வெளியே ஓடிப் பார்த்தேன். அதற்குள், நிலச்சரிவு அதிவேகமாக வரத் தொடங்கிவிட்டது.
நாங்கள் கீழே ஓடிச்சென்று தோட்டத்தில் ஏறிக் கொண்டோம், இதனால் நூழிழையில் உயிர்பிழைத்தோம். நிலச்சரிவு ஏற்பட்டபோது பாலத்தின் மீது இருந்த டேங்கர் லாரி, எங்கள் ஓட்டலை நோக்கி தான் வந்தது.
ஓட்டலுக்கு நேர் எதிரே நிறுத்தப்பட்டிருந்த ஒரு ஜீப்பின் மீது மோதியதால் மட்டுமே அந்த லாரி ஓட்டல் மீது மோதுவது தவிர்க்கப்பட்டது" என்றார்.