

மும்பை - அகமதாபாத் அதிவேக புல்லட் ரயில் திட்டத்தில் தாமதம் ஏற்பட்டதற்கு இந்திய அதிகாரிகளின் அலட்சியப் போக்கும், பொறுப்பற்ற உணர்வும், சுயநலமுமே காரணம் என்று ஜப்பானின் முன்னாள் நீதித்துறை அமைச்சர் ஹிடேகி மகிஹாரா குற்றம் சாட்டியுள்ளார்.
இந்திய அதிகாரிகள் தங்களின் சொந்த நலன்களை மட்டுமே முன்னிறுத்திப் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், கொடுத்த வாக்குறுதிகளை மீண்டும் மீண்டும் மீறியதே தாமதத்திற்கு முழுக் காரணம் என்றும் ஹிடேகி மகிஹாரா தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் இந்த திட்டத்திற்கு பொறுப்பான அமைச்சரையும் மகிஹாரா விமர்சித்துள்ளார்.
இந்தத் திட்டம் ஜப்பானின் அசல் ஷின்கன்சென் மாதிரியிலிருந்தும், சிக்னலிங் முறையிலிருந்தும் கணிசமாக விலகிச் சென்றுவிட்டதாக டோக்கியோவைச் சேர்ந்த செய்தி இணையதளம் ஒன்றில், மூத்த ஜப்பானிய ரயில்வே பொறியாளரும், டெல்லியைச் சேர்ந்த மெட்ரோ வாகன ஆலோசகருமான இசாவோ சுஜிமுரா கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார்.
இசாவோ சுஜிமுரா எழுதிய கட்டுரைக்கு பதிலளிக்கும் விதமாக இக்கருத்தை இந்த சமூக வலைதளப் பதிவை முன்னாள் அமைச்சர் வெளியிட்டுள்ளார்.
மகிஹாராவின் இந்தக் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து காங்கிரஸ், பாஜகவை விமர்சித்துள்ளது. இதனைத்தொடர்ந்து இந்த குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்துள்ளது இந்தியா.
ஜப்பான் முன்னாள் அமைச்சரின் இந்தக் கருத்துக்கள் உண்மைக்கு முற்றிலும் மாறானவை என்று இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
இந்தியா - ஜப்பான் இடையேயான பேச்சுவார்த்தைகள் சிறப்பாகவும், திட்டத்தின் கட்டுமானப் பணிகள் திட்டமிட்ட நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கேற்ப வேகமாக முன்னேறி வருவதாகவும், முதல் பகுதியாக சூரத் முதல் பிலிமோரா வரையிலான இயக்கம் 2027ம் ஆண்டிலேயே பயன்பாட்டிற்கு வரும் என தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் முதல் புல்லட் ரயில் திட்டம் மும்பை - அகமதாபாத் இடையே அமைக்கப்பட்டு வருகிறது. 508 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த வழித்தடம், மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் தாத்ரா நகர் ஹவேலி ஆகிய பகுதிகள் வழியே மும்பையின் பாந்த்ரா குர்லா வளாகத்தை அகமதாபாத்துடன் இணைக்கும். இதற்கிடையில் 12 நிலையங்கள் உள்ளன.
இந்த புல்லட் ரயில் மணிக்கு 320 கி.மீ. வேகத்தில் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடம் இரு நகரங்களுக்கு இடையேயான பயண நேரத்தை சுமார் எட்டு மணி நேரத்திலிருந்து இரண்டு மணி நேரமாகக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.