காதல் திருமணம் செய்த இளம்பெண் கொலை: தூக்கில் தொங்கவிட்டு நாடகமாடிய தந்தை கைது

போலீசார் சவுதேஸ்வரி மற்றும் அவரது கணவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
காதல் திருமணம் செய்த இளம்பெண் கொலை: தூக்கில் தொங்கவிட்டு நாடகமாடிய தந்தை கைது
Published on

ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் மச்சார்லாவை சேர்ந்தவர் சந்திரசேனா. தொழிலதிபர். இவரது மகள் சவுதேஸ்வரி (வயது 22) ஜம்மல மடகாவை சேர்ந்தவர் நாகராஜு. இவர் சவுதேஸ்வரியின் பக்கத்து வீட்டில் உள்ள உறவினர் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம்.

அப்போது சவுதேஸ்வரிக்கும், நாகராஜுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் நீண்ட நேரம் செல்போனில் பேசி தங்களது காதலை வளர்த்து வந்தனர். மகளின் காதல் விவகாரம் அவரது தந்தைக்கு தெரியவந்தது. அவர் மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இருப்பினும் சவுதேஸ்வரி, நாகராஜு உடனான காதலை கைவிடவில்லை.

இந்த நிலையில் சவுதேஸ்வரிக்கு அரசு பள்ளி ஆசிரியர் ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. அவசர, அவசரமாக திருமணத்திற்கு ஏற்பாடுகள் செய்தனர்.

இதனால் கடந்த மாதம் சவுதேஸ்வரி வீட்டை விட்டு வெளியேறி நாகராஜுவை திருமணம் செய்து கொண்டார். மகளின் காதல் திருமணத்தை ஜீரணிக்க முடியாத அவரது தந்தை மகள் வீட்டிலிருந்த நகை, பணத்தை திருடி சென்று விட்டதாக போலீசில் புகார் செய்தார்.

போலீசார் சவுதேஸ்வரி மற்றும் அவரது கணவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சவுதேஸ்வரி வீட்டில் இருந்து நகை, பணத்தை எடுத்துச் செல்லவில்லை என தெரிவித்தார்.

இருப்பினும் சந்திரசேனா தனது மகள் தனது வீட்டில் 5 நாட்கள் தங்கி இருந்துவிட்டு கணவர் வீட்டுக்கு செல்லலாம் என போலீசாரிடம் எழுதிக் கொடுத்துவிட்டு மகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றார். கடந்த மாதம் 19-ந்தேதி கணவர் வீட்டுக்கு செல்ல வேண்டிய நிலையில் 18-ந் தேதி சந்திரசேனா மனைவி, மகனை விவசாய நிலத்திற்கு அனுப்பி வைத்தார்.

பின்னர் வீட்டில் இருந்த தனது உறவினர் பால சீனுவுடன் சேர்ந்து தூங்கிக் கொண்டு இருந்த சவுதேஸ்வரி முகத்தில் தலையணையை வைத்து அமுக்கினர். சவுதேஸ்வரி தன்னை கொலை செய்ய வேண்டாம் என தந்தையிடம் கெஞ்சினார். இருப்பினும் மனம் இறங்காத அவரது தந்தை மகளை துடி, துடிக்க கொலை செய்தார். பின்னர் பிணத்தை தூக்கில் தொங்கவிட்டு அவர் தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடினார். தனது மனைவியின் சாவில் சந்தேகம் இருப்பதாக நாகராஜு போலீசில் புகார் செய்தார். போலீசார் சந்தேகம் மரணம் என வழக்கு பதிவு செய்து சவுதேஸ்வரி பிணத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனை அறிக்கையில் சவுதேஸ்வரியை மூச்சடைக்க வைத்து கொலை செய்தது தெரிய வந்தது. போலீசார் சந்திரசேனாவை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் தனது மகளின் காதல் திருமணம் பிடிக்காததால் தனது மருமகனுடன் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து சந்திரசேனா, பால சீனு ஆகியோரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com