

நாட்டில் சமையல் எரிவாயு தட்டுப்பாடுக்கு மத்தியில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி எத்தனால் அடுப்புக்கு மாற மக்களை அறிவுறுத்தியுள்ளார்.
நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, "எல்பிஜி-யை விடக் குறைந்த செலவில் எத்தனால் மூலம் இயங்கக்கூடிய ஒரு புதிய கேஸ் அடுப்பு சந்தைக்கு வரவுள்ளது.
இதில் 7 சதவீதம் தண்ணீரை எத்தனாலுடன் கலந்து உங்களால் அடுப்பை எரிக்க முடியும். இது சாதாரண எல்பிஜி கேஸ் போன்றே எரியும். வணிகரீதியான எல்பிஜி சிலிண்டர்களை விட இது மிகவும் மலிவானது.
இது மண்ணெண்ணெய் மற்றும் பாரம்பரிய கேஸ் சிலிண்டர்களை விடப் பாதுகாப்பானது மற்றும் மாசற்றது" என்று தெரிவித்துள்ளார்.
இந்தியா கடந்த சில ஆண்டுகளாகவே எத்தனால் உற்பத்தியில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
கடந்த 2014-ஆம் ஆண்டில் பெட்ரோலில் வெறும் 1.5% மட்டுமே எத்தனால் கலக்கப்பட்டது. ஆனால் கடந்த 2025ஆம் ஆண்டிற்குள் பெட்ரோலில் 20% எத்தனால் கலக்கும் இலக்கை இந்தியா எட்டியுள்ளது.
வாகனங்களுக்கு அடுத்தபடியாக, தற்போது இந்த எத்தனால் பயன்பாட்டை இந்திய சமையலறைகளுக்கும் கொண்டு சேர்க்கும் முயற்சியில் அரசு இறங்கியுள்ளது.
இருப்பினும், எதிர்க்கட்சிகள் மற்றும் நிபுணர்கள், இந்தத் திட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுத்து வந்தனர்.
குறிப்பாக மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியின் 2 மகன்கள் நாட்டின் 2 முன்னணி எத்தனால் உற்பத்தி ஆலையை நடத்துவதால் அவர்களின் சொந்த ஆதாயத்துக்காக எத்தனால் கலந்த பெட்ரோல், எத்தனால் அடுப்பை ஊக்குவிக்கப்படுவதாக விமர்சனங்கள் எழுந்தன.