10 ஆண்டு போராட்டம்.. டீ விற்கும் தந்தை.. சிஏ தேர்வில் தேர்ச்சி பெற்ற மகள் - வீடியோ வைரல்

தேர்வில் தேர்ச்சி பெறுவது பலரின் வாழ்நாள் லட்சியமாக இருந்து வருகிறது.பிரஜாபதி தந்தைக்கு பலர் அறிவுரை கூறியுள்ளனர்.
10 ஆண்டு போராட்டம்.. டீ விற்கும் தந்தை.. சிஏ தேர்வில் தேர்ச்சி பெற்ற மகள் - வீடியோ வைரல்
Published on

நாட்டில் பல்வேறு போட்டி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு பாடப்பிரிவு மற்றும் தொழில்முறை சார்ந்து போட்டி தேர்வு நடத்தும் விதம் அதன் பாடத்திட்டம் என வேறுப்படும். எதுவாயினும், போட்டித் தேர்வுகளில் மிகவும் கடினமான ஒன்றாக பார்க்கப்படுவது பட்டய கணக்காளர் (சிஏ) தேர்வு ஆகும். இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவது பலரின் வாழ்நாள் கனவு, லட்சியமாக இருந்து வருகிறது.

அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தெருவோரம் காய்கறி விற்கும் பெண்ணின் மகன் பட்டய கணக்காளர் தேர்வில் தேர்ச்சி பெற்று தாயை சந்தித்து இருவரும் பரஸ்பரம் ஆனந்த கண்ணீர் வடித்த நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியது.

இந்த வரிசையில், டெல்லியை சேர்ந்த அமிதா பிரஜாபதி பட்டய கணக்காளர் தேர்வில், தான் தேர்ச்சி பெற்ற சாதனை குறித்து பதிவிட்டுள்ளார். அதில் கடந்த பத்து ஆண்டுகளாக பட்டய கணக்காளர் தேர்வில் போட்டியிட்டு, இப்போது தான் தேர்ச்சி பெற்றதாக பிரஜாபதி தெரிவிதுள்ளார்.

மேலும், தனது குடும்பம் குப்பம் ஒன்றில் வாழ்வதாகவும் தந்தை தேநீர் வியாபாரி என்றும் அவர் தெரிவித்துள்ளார். பெண் பிள்ளையை பட்டய கணக்காளர் தேர்வு எழுத வைக்க வேண்டாம். எப்படியும் அவள் வேறொரு வீட்டிற்கு சென்றிடுவாள். அவளுக்கு செலவிடுவதற்கு பதில், அந்த தொகையை கொண்டு வேறு எதையாவது செய்யுங்கள் என்று பிரஜாபதி தந்தைக்கு பலர் அறிவுரை கூறியுள்ளனர்.

எனினும், அவர்கள் அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் பிரஜாபதியை படிக்க வைத்துள்ளனர். அதன்படி பத்து ஆண்டுகள் பெரும் கனவோடு படிப்பில் கவனம் செலுத்திய பிரஜாபதி இந்த முறை தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

பட்டய கணக்காளர் தேர்வில் தேர்ச்சி பிரஜாபதி தனது தந்தையை கட்டித்தழுவிய காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

X

Maalai Malar
www.maalaimalar.com