நான் தீவிர இந்து.. ஸ்ரீ ராமரை அவமதித்ததால் தீப்கே மீது மை வீசினேன் - பெண் பொறுப்பேற்பு

அபிஜித் தீப்கே, 'நீலம் எனது நிறம்... ஜெய் பீம்!' என்று பதிவிட்டுள்ளார்.
தீப்கே, பர்கா த்ரெஹான்
தீப்கே, பர்கா த்ரெஹான்
Published on

டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே மீது மை வீசியதற்கு பெண் ஒருவர் பொறுப்பேற்றுள்ளார்.

போராட்டம்

நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்றுமத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஜூன் 20 முதல் அபிஜித் தீப்கே தலைமையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியை சேர்ந்த இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

வாங்சுக் நிலைமை

இதில் 20 நாளாக உண்ணாவிரதம் இருந்து வந்த செயல்பாட்டாளர் மற்றும் கல்வியாளர் சோனம் வாங்சுக் உடல்நிலை மோசமடைந்த நிலையில் அவர் வலுக்கட்டாயமாக டெல்லி போலீசாரால் சப்தர்ஜங்மருத்துவமனைக்கு தூக்கி செல்லப்பட்டார்.

இதனால் போராட்டக் களத்தில் பரபரப்பான சூழல் நிலவியது. தானும் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் இருக்கப் போவதாக தீப்கே அறிவித்தார்.

மை வீச்சு

இதனையே தீப்கே போராட்டக்காரர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் மேடையில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது கூட்டத்திலிருந்து வந்த பெண் ஒருவர் திடீரென மேடைக்கு அருகில் வந்து, தான் வைத்திருந்த மையை அபிஜித் தீப்கே மீது வீசினார்.

இதனால் அதிர்ச்சியடைந்த தீப்கேவின் ஆதரவாளர்கள் உடனடியாக அந்தப் பெண்ணைத் தடுத்து நிறுத்தினர்.

அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்களும் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் சிறிது நேரம் தடைபட்ட போராட்டம், பின்னர் மீண்டும் தொடர்ந்தது. மை வீச்சு வீடியோ வைரலாகி வருகிறது.

பொறுப்பேற்பு

தீப்கே மீது மை வீசியதற்கு பர்கா த்ரெஹான் என்ற பெண் பொறுப்பேற்றுள்ளார். இதுகுறித்து அவர் தன் எக்ஸ் பதிவில்,

"ஆமாம், பர்கா த்ரெஹானாகிய நான் தான் அபிஜித் தீப்கே மீது மையை வீசினேன். ஏன்னென்றால், அவருடைய கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் மேடையில் எனது பிரபு ஸ்ரீராமர் பகிரங்கமாக அவமதிக்கப்பட்டபோது, அதைத் தடுத்து நிறுத்தாமல் அவர் மேடையில் நின்று சிரித்துக் கொண்டிருந்தார்.

நான் ஒரு தீவிரமான இந்து. நமது கடவுள் பொதுவெளியில் இழிவுபடுத்தப்பட்டதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை; அது என் மனதை ஆழமாகப் பாதித்தது. அதற்கு எதிராக நான் காட்டிய எதிர்ப்புதான் இந்த மை வீச்சு. எனது இந்தச் செயலை எண்ணி நான் பெருமைப்படுகிறேன், இதில் எனக்கு எந்தப் பச்சாதாபமும் இல்லை. ஜெய் ஹிந்த். ஜெய் ஸ்ரீராம்!" என்று குறிப்பிட்டுள்ளார்.

தீப்கே பதிலடி

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, தனது எக்ஸ் பக்கத்தில் இந்த வீடியோவைப் பகிர்ந்த அபிஜித் தீப்கே, 'நீலம் எனது நிறம்... ஜெய் பீம்!' என்று பதிவிட்டுள்ளார்.

இதனிடையே சப்தர்கஞ்ச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோனம் வாங்சுக் சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுக்கிறார் என மருத்துவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com