

டெல்லியின் விவேக் விஹார் பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவியதால், கட்டிடத்திற்குள் இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேற முயன்றனர். 2, 3, மற்றும் 4 மாடிகளில் தீ வேகமாக பரவியது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் விரைந்தனர். தீயை அணைக்கும் பணியில் 14 தீயணைப்பு வாகனங்களும் 80-க்கும் மேற்பட்ட தீயணைப்பு பணியாளர்களும் ஈடுபட்டனர்.
இந்த தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். கட்டிடத்தில் இருந்து 15 பேர் மீட்கப்பட்டனர். அவர்களில் லேசான காயங்களுடன் இருந்த 2 பேர் மருத்துவ சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
தீயணைப்பு துறையினரின் துரித நடவடிக்கையால் காலை சுமார் 8 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
மின்கசிவு காரணமாக ஏசி வெடித்து தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.