

பொது இடங்களில் புகைபிடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், ஒரு பயணி காருக்குள் புகை பிடித்ததால் அந்த பயணத்தை டிரைவரே ரத்து செய்த சம்பவம் இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது.
இதுதொடர்பாக லக்ஷய் மேத்தா என்பவர் எக்ஸ் தளத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், பயணி ஒருவர் காருக்குள் புகைபிடிப்பதைப் பார்த்த டிரைவர் அவரை கண்டிக்கிறார். சிகரெட்டை பற்றவைப்பதற்கு முன் என்னிடம் அனுமதி கேட்டீர்களா? என்று டிரைவர் கேட்கிறார். மேலும் அவர் எனது வாகனத்தில் புகைபிடிக்க அனுமதி இல்லை என்பதையும் தெளிவாக கூறுகிறார்.
அதற்கு அந்த பயணி நான் தானே டாக்ஸியை முன்பதிவு செய்திருந்தேன். அதனால் காருக்குள் புகைபிடிக்க யாருடைய அனுமதியும் தேவையில்லை என்று வாதிட்டுள்ளார். அதற்கு டிரைவர், இந்த கார் எனது சொந்த வாகனம். இதில் நான் கூறும் விதிகள் மதிக்கப்பட வேண்டும். எனவே நான் இந்த பயணத்தை நிறுத்துகிறேன் என கூறி காரை நிறுத்தி பயணியை வெளியேறுமாறு கூறுகிறார்.
மேலும், உங்கள் பணம் எனக்கு தேவையில்லை. தயவுசெய்து என் காரில் இருந்து இறங்குங்கள். நான் ஒரு டாக்ஸி டிரைவர், உங்கள் வேலையாள் அல்ல என்று கூறும் காட்சிகள் உள்ளது. வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் டிரைவரின் முடிவை ஆதரித்து பதிவிட்டனர். அதில், பயணிகள் பயணத்திற்கான கட்டணத்தை செலுத்தினாலும், வாகனம் டிரைவருக்கே சொந்தமானது. அதில் புகைபிடிப்பதை தடை செய்ய அவருக்கு முழு உரிமை உண்டு என்று கூறியிருந்தனர்.
ஒரு பயனர், புகைபிடித்தல் உடல்நலத்திற்குத் தீங்கானது. பல பொது இடங்களில் புகைபிடிக்கக் கடுமையான தடைகள் உள்ளன. தனது காரில் புகைபிடிக்க அனுமதிக்க மறுத்ததன் மூலம் டிரைவர் சரியானதையே செய்தார் என்று பதிவிட்டிருந்தார்.