

வீட்டிற்கு தேவையான மளிகைப் பொருட்களை சில நிமிடங்களில் டெலிவரி செய்யும் சேவையை பிளிங்கிட் நிறுவனம் தற்போது மலைப் பகுதிகளிலும் தொடங்கியுள்ளது.
ஆனால் அது அவ்வளவு எளிமையானதாகவோ அல்லது வழக்கமானதாகவோ இல்லை என்பதை பிரபல யூடியூபர் துருவ் என்பவர் பகிர்ந்த ஒரு வீடியோவில் உறுதியாகியுள்ளது.
இமாச்சல் பிரதேசத்தில் உள்ள மலைப்பகுதியான மணாலியில் பிளிங்கிட் நிறுவனத்தில் தான் ஆர்டர் செய்த பொருட்கள் எவ்வாறு டெலிவரி வாங்கப்பட்டது என்பதை வீடியோவில் பதிவிட்டுள்ளார்.
மலைப்பகுதியில் தங்கியிருந்த துருவ் அத்தியாவசிய பொருட்கள் தீர்ந்து விட்டதையடுத்து, பிளிங்கிட் செயலி மூலம் உணவுப் பொருட்களை ஆர்டர் செய்தார். அப்போது பிளிங்கிட் செயலி, உணவு டெலிவரி செய்ய 25 நிமிடங்கள் ஆகும் என குறுஞ்செய்தி அனுப்பியது.
இதையடுத்து இருசக்கர வாகனத்தால் மலை மீது பயணிக்க முடியாது என்பதால், பிளிங்கிட் பொருட்களை ஒரு கி.மீ. தூரம் கீழே வந்து வாங்க வேண்டியது ஆயிற்று யூடியூபருக்கு.
இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட அந்த நபர், “ஒரு டெல்லிவாசியின் பார்வையில் மணாலி வாழ்க்கை” என்று எழுதியிருந்தார்.
அந்தப் பதிவுக்குப் பதிலளித்த பயனர் ஒருவர், “பிளிங்கிட் இறுதியாக மலைப்பகுதிகளிலும் கிடைப்பதைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.
இது, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மணாலியில் ஒரு பல் துலக்கும் பிரஷ் வாங்குவதற்காக, இரவு முழுவதும் காத்திருந்ததை எனக்கு நினைவூட்டியது” என்று குறிப்பிட்டார்.
இந்தியாவில் அதிகமான டிஜிட்டல் நாடோடிகளும், பயணிகளும் இமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் போன்ற இடங்களில் தங்குவதைத் தேர்ந்தெடுப்பதால், டெலிவரி நிறுவனங்கள் அத்தகைய சுற்றுலா நகரங்களுக்கும் தங்கள் சேவைகளை விரிவுபடுத்தி வருகின்றன.