

ஹரியானா மற்றும் பஞ்சாபில் இருந்து தண்ணீர் டிராக்டர்களில் மதுபானங்களை கடத்தி, மதுவிலக்கு அமலில் உள்ள பீகாருக்கு வெளிநாட்டு மதுபானங்களை விற்பனை செய்து வந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள கோபிகஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அங்கு இரவு முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டரை சோதனை செய்தனர்.
அப்போது அந்த டிராக்டரை சோதனை செய்தபோது, தண்ணீர் டேங்கரில் சுமார் 11 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1,005 லிட்டர் வெளிநாட்டு மதுபானம் கைப்பற்றப்பட்டது.
இதையடுத்து உத்தர பிரதேசம் தானா பவன் பகுதியை சேர்ந்த டிராக்டர் ஓட்டுநர் மனோஜ் (எ) ராகுல் சைனி என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையின் போது, ஹரியானாவின் பானிபட் மாவட்டத்தில் உள்ள குர்தால் பகுதியில் இருந்து தண்ணீர் டேங்கரில் மதுபானத்தை பீகாருக்கு கொண்டு செல்வதற்காக, தனக்கு ரூ.25,000 தருவதாக கூறியதாக தெரிவித்தார்.
மேலும் டேங்கரின் முன்பகுதியில் 1,005 லிட்டர் மதுபானம் அடங்கிய 114 அட்டைப்பெட்டியில் வெளிநாட்டு மதுபானங்கள் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததாகவும், தண்ணீர் டேங்கர் போல தோற்றமளிப்பதற்காக டிராக்டரை மாற்றியமைத்ததாகவும் கூறினார்.
இதையடுத்து போலீசார் டிராக்டர் மற்றும் டேங்கரை பறிமுதல் செய்து கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து மாநிலங்களுக்கு இடையேயான மதுபான கடத்தலில் ஈடுபட்ட மற்றவர்களை அடையாளம் காண காவல் கண்காணிப்பாளர் சுபம் அகர்வால் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.