டெல்லி கலவரம்: உளவுத்துறை அதிகாரி அங்கித் சர்மா கொலை வழக்கில் தாஹிர் உசேன் குற்றவாளி என தீர்ப்பு!

இக்கொலை வழக்கு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
Ankit Sharma murder case
Published on

கடந்த 2020-ஆம் ஆண்டு வடகிழக்கு டெல்லியில் நடைபெற்ற வன்முறையின் போது, உளவுத்துறை அதிகாரி அங்கித் சர்மா கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் கவுன்சிலர் தாஹிர் உசேன் மற்றும் பலர் குற்றவாளிகள் என்று டெல்லி கர்கர்டூமா நீதிமன்றம் நேற்று அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2020 பிப்ரவரி மாதத்தில் வடகிழக்கு டெல்லி பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களின் போது கடுமையான மதக் கலவரம் வெடித்தது.

அங்கித் சர்மா படுகொலை:

இந்த வன்முறையின் போது, உளவுத்துறை பாதுகாப்பு உதவியாளராகப் பணியாற்றி வந்த 26 வயதான அங்கித் சர்மா மாயமானார்.

அதனைத் தொடர்ந்து, சாந்த் பாக் பகுதியில் உள்ள ஒரு வடிகால் சாக்கடையில் இருந்து அவரது உடல் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டது. இக்கொலை வழக்கு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

தாஹிர் உசேன் மீதான குற்றச்சாட்டுகள்:

முன்னாள் கவுன்சிலர் தாஹிர் உசேன் கொலை மற்றும் கலவரம் தொடர்பான பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதே நேரத்தில், அவர் மீதான 'சதித் திட்டம் தீட்டுதல்' என்ற குற்றச்சாட்டை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இக்கொலை வழக்கில் தாஹிர் உசேனுடன் சேர்த்து நாசிம், காஷிம், அனஸ் மற்றும் ஜாவேத் ஆகியோரும் கொலை, கடத்தல், மத நல்லிணக்கத்தைக் கெடுக்கும் வகையில் பகைமையை தூண்டுதல் மற்றும் கலவரத்தில் ஈடுபடுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த மேலும் 6 நபர்களை போதிய ஆதாரங்கள் இல்லாததால் நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டுள்ளது.

குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்கள் குறித்த வாதங்களை நீதிமன்றம் மற்றொரு தேதியில் விரிவாகக் கேட்கவுள்ளது. அதன் பின்னரே இவர்களுக்கான இறுதி தண்டனை அறிவிக்கப்படும்.

X

Maalai Malar
www.maalaimalar.com