குஜராத் அரசு பள்ளி விடுதியில் கிச்சடி, கோதுமை ரொட்டி சாப்பிட்ட 147 மாணவிகளுக்கு திடீர் உடல் நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி

குழந்தையின் நிலை குறித்து பள்ளி நிர்வாகம் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை என மாணவியின் பெற்றோர் குற்றம்சாட்டினர்.
147 hostel girls admitted to hospital in Gujarat Govt School
Published on

குஜராத்தில் உள்ள ஒரு அரசு உறைவிட பள்ளியில், இரவு உணவு சாப்பிட்ட மாணவிகளுக்கு உணவு ஒவ்வாமை காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சுரேந்திரநகர் மாவட்டத்தில் உள்ள கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளி விடுதியில் 215 மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனர்.

நேற்றிரவு உணவு சாப்பிட்ட இவர்களில் 147 பேருக்கு இன்று காலை வயிற்று வலி, வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்பட்டு சூடா சமூக சுகாதார மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் 45 மாணவிகளுக்கு உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டதை அடுத்து, சுரேந்திர நகரில் உள்ள மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.

இதுகுறித்து மாவட்ட தலைமை சுகாதார அதிகாரி பி.ஜி. கோஹில் கூறுகையில், “நேற்று இரவு பள்ளியின் விடுதியில் சப்ஜி, கோதுமை ரொட்டி, கிச்சடி மற்றும் கீர் ஆகிய உணவுகளை சாப்பிட்ட மாணவிகளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது.

அந்த உணவு மாதிரிகள் தற்போது பகுப்பாய்விற்காக சேகரிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகம் தங்களுக்கு நேரடியாக எந்தவித தகவலும் தெரிவிக்கவில்லை என பெற்றோர் ஒருவர் தெரிவித்தார்.

மேலும் இந்த பள்ளி விடுதியில் பயிலும் தனது இரண்டு மகள்களில் ஒருவருக்கு நேற்று உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டார்.

ஆனால் இதுகுறித்து பள்ளி நிர்வாகம் தனக்கு எந்தவிதமான தகவலையும் தெரிவிக்கவில்லை என அந்த மாணவியின் பெற்றோர் குற்றம்சாட்டினார்.

தற்போது மாணவிகள் அனைவருக்கும் எந்தவித ஆபத்தும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com