

கே.கே.நகர்:
சட்டமன்ற தி.மு.க. எதிர்க்கட்சி துணைத்தவைர் துரைமுருகன் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் நடை பெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னை யில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இன்று (அதாவது நேற்று) 22 சட்டமன்ற உறுப்பினர்கள் டி.டி.வி.தினகரன் பக்கம் உள்ளனர். அவர் பக்கம் ஒவ்வொரு நாளும் சட்டமன்ற உறுப்பினர்கள் சென்று கொண்டு இருக்கின்றனர். 113 எம்.எல்.ஏ.க்களை வைத்து கொண்டு தற்போது மைனாரிட்டி அரசாக அ.தி.மு.க. உள்ளது.
இந்த அரசு தொடர்ந்தால் அது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று கவர்னரிடம் தெரிவித்துள்ளோம். அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். கவர்னர் முடிவு எடுக்க காலதாமதம் ஆனால் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்க தயாராக உள்ளோம்.
சட்டமன்றத்திற்குள் குட்கா கொண்டு வந்தது தொடர்பாக எங்களை இடைநீக்கம் (சஸ்பெண்ட்) செய்து விட்டு மெஜாரிட்டியை நிரூபிக்கலாம் என்று இந்த அரசு எதிர்பார்க்கிறது. அது நடக்காது. இந்த விவகாரத்தில் அவை முன்னவர் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றாமல் உரிமை மீறல் குழுவை 40 நாட்களுக்கு பிறகு கூட்டுவது தவறு.
தி.மு.க. எப்போதும் குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்காது. புறவழியில் அரியணை ஏறமாட்டோம். பா. ஜ.க., அ.தி.மு.க.வை ஆட்டி வைக்கிறார்கள். அவர்களும் அதற்கேற்றவாறு ஆடுகிறார்கள். மத்திய அரசின் ஏஜெண்ட் தான் கவர்னர், அவரிடம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அளித்த மனு ஒரு சடங்கு.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் டி.டி.வி. தினகரன் அணியினர் தி.மு.க.வை ஆதரிப்பது குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்து பேசுகையில், ஆளுங்கட்சியை எதிர்ப்பவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் ஆதரவு தெரிவிப்பார்கள் என்றார்.