search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க. அலுவலகத்தை எடப்பாடியிடம் ஒப்படைத்த விவகாரம்- ஓபிஎஸ் வழக்கறிஞர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடுக்கு ஏற்பாடு
    X

    அ.தி.மு.க. அலுவலகத்தை எடப்பாடியிடம் ஒப்படைத்த விவகாரம்- ஓபிஎஸ் வழக்கறிஞர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடுக்கு ஏற்பாடு

    • ஓ.பன்னீர் செல்வத்தின் வழக்கறிஞர்கள் அரவிந்த் பாண்டியன், திருமாறன் ஆகியோர் நீதிபதி வழங்கிய தீர்ப்பின் நகலை பெற்று படித்து பார்த்து மேல்முறையீடு செய்ய ஆராய்ந்து வருகின்றனர்.
    • இன்று அல்லது நாளை சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்து விடுவோம் என்று தெரிவித்தனர்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் விசுவரூபம் எடுத்தபோது எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் மற்றொரு அணியும் உருவானது.

    இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு கடந்த 11-ந் தேதி வானகரத்தில் கூடியபோது அன்று காலையில் அ.தி.மு.க. பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓ.பன்னீர் செல்வத்தின் கட்சி பதவிகள் பறிக்கப்பட்டன. அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்.

    இந்த சமயத்தில் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ராயப்பேட்டையில் உள்ள தலைமைக்கழகத்திற்குள் அதிரடியாக புகுந்தார்.

    அந்த சமயத்தில் எடப்பாடி ஆதரவாளர்களுக்கும் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கல்வீச்சு, உருட்டு கட்டை தாக்குதல் சம்பவங்களும் நடந்தன.

    எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களை விரட்டி அடித்தபிறகு ஓ.பன்னீர் செவ்வம் தனது ஆதரவாளர்களுடன் அ.தி.மு.க. தலைமை கழகத்திற்கு சென்று சுமார் 1 மணி நேரம் இருந்தார்.

    அதன் பிறகு போலீசார் அவரை வெளியேற்றி அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு சீல் வைத்தனர். பின்னர் வருவாய் கோட்டாட்சியர் வசம் சாவி ஒப்படைக்கப்பட்டது.

    இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர் செவ்வமும் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார் அ.தி.மு.க. தலைமைக்கழகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமி வசம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறினார்.

    இந்த தீர்ப்பில் அ.தி.மு.க. அலுவலக சாவியை தன் வசம் ஒப்படைக்க வேண்டும் என்ற ஓ.பன்னீர் செல்வத்தின் கோரிக்கையை நீதிபதி நிராகரித்து விட்டார்.

    இந்த தீர்ப்பு பற்றி ஓ.பன்னீர் செல்வத்துக்கு தெரிய வந்ததும் பெரும் அதிர்ச்சி அடைந்தார். உடனே தனது வழக்கறிஞரை அழைத்து உடனே சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    அதன்படி ஓ.பன்னீர் செல்வத்தின் வழக்கறிஞர்கள் அரவிந்த் பாண்டியன், திருமாறன் ஆகியோர் நீதிபதி வழங்கிய தீர்ப்பின் நகலை பெற்று படித்து பார்த்து மேல்முறையீடு செய்ய ஆராய்ந்து வருகின்றனர்.

    இன்று அல்லது நாளை சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்து விடுவோம் என்று தெரிவித்தனர்.

    Next Story
    ×