search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்- ஓ.பி.எஸ். திட்டத்தை முறியடிக்க எடப்பாடி பழனிசாமி தீவிரம்
    X

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்- ஓ.பி.எஸ். திட்டத்தை முறியடிக்க எடப்பாடி பழனிசாமி தீவிரம்

    • இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ள ஓ.பன்னீர்செல்வத்தை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்தும், அவரது திட்டங்களை முறியடிப்பது குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.
    • ஆலோசனை கூட்டத்தில் ஈரோடு இடைத்தேர்தல் வேட்பாளராக முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் பெயர் பரிசீலிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    சேலம்:

    ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் என இருதரப்பும் போட்டியிட தயாராகி வருகின்றனர்.

    நேற்று, சேலம் மாவட்டம் ஓமலூர் கோட்டை மேட்டுப்பட்டியில் உள்ள அ.தி.மு.க. சேலம் புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    இதில் முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை, முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், கே.பி.முனுசாமி, ஜெயக்குமார், ஓ.எஸ்.மணியன், எஸ்.பி.வேலுமணி, காமராஜ், கே.பி.அன்பழகன், பெஞ்சமின், செல்லூர் ராஜூ, உதயகுமார், விஜயபாஸ்கர், வளர்மதி, கே.சி.வீரமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், ராஜேந்திர பாலாஜி, கே.சி.சம்பத், இசக்கி சுப்பையா, நத்தம் விஸ்வநாதன், சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் உள்பட பலர் பங்கேற்றனர்.

    இந்த கூட்டம் மாலை 5 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை 3 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்றது. இதில் ஈரோடு தொகுதி இடைத்தேர்தல் பணிகள் குறித்தும், வேட்பாளராக யாரை நிறுத்துவது, தேர்தல் வெற்றிக்கு என்னென்ன செய்ய வேண்டும், அ.தி.மு.க.வுக்கு சாதகமான நிகழ்வுகள் குறித்தும், இரட்டை இலை சின்னத்தை கைப்பற்றுவது குறித்தும், விரைவில் வரவுள்ள கட்சி தொடர்பான வழக்கின் தீர்ப்பு குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.

    இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ள முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்தும், அவரது திட்டங்களை முறியடிப்பது குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் ஆலோசனை கூட்டத்தில் ஈரோடு இடைத்தேர்தல் வேட்பாளராக முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் பெயர் பரிசீலிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    அவர் மறுக்கும் பட்சத்தில் முன்னாள் எம்.எல்.ஏ தென்னரசு, பகுதி செயலாளர் மனோகரன் ஆகியோரில் ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என கூறப்படுகிறது.

    சின்னம் கிடைக்காவிட்டாலும் சுயேட்சை சின்னத்தில் போட்டியிட தயங்க கூடாது, நாம் தான் உண்மையான அ.தி.மு.க என்பதை நிரூபித்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அதை திறமையாக எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    மேலும் அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். எனவே தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபடுங்கள் எனவும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். ஆலோசனைக்கு பின்னர் எடப்பாடி பழனிசாமி நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது இல்லத்துக்கு புறப்பட்டு சென்றார்.

    இன்று (புதன்கிழமை) காலை எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு வந்தார். அங்கு அவர் முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் பலர் அ.தி.மு.க.வில் இணைந்தனர். அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமி முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் 2-வது நாளாக இன்றும் ஆலோசனை நடத்தினார்.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் அ.தி.மு.க.வில் தொடர்ந்து நிலவி வரும் சர்ச்சைகள் தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. எனினும் அதை சரிசெய்து தி.மு.க. கூட்டணிக்கு பலமான போட்டியை கொடுக்க எடப்பாடி பழனிசாமி திட்டம் வகுத்து வருகிறார்.

    இதனால் அரசியல் விமர்சகர்கள் மற்றும் மற்ற கட்சியினரின் பார்வை அ.தி.மு.க. 2 அணிகளை நோக்கி திரும்பியுள்ளது.

    குறிப்பாக எடப்பாடி பழனிசாமியின் முடிவு மற்றும் வியூகத்தை அறிந்து கொள்ள அனைத்து தரப்பினரிடமும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    Next Story
    ×