search icon
என் மலர்tooltip icon

    உடற்பயிற்சி

    இன்று இளைஞர்கள் ஏன் நடைப்பயிற்சி செய்ய வேண்டும்?
    X

    இன்று இளைஞர்கள் ஏன் நடைப்பயிற்சி செய்ய வேண்டும்?

    • சிறிது நேரமாவது நடைப்பயிற்சி, உடற்பயிற்சியை வீட்டிலும் செய்வது நல்லது.
    • உடற்பயிற்சி செய்வோம், நோய்கள் வராமல் தடுப்போம்.

    நாம் அணியும் தானியங்கி கைக்கடிகாரம் தானாக இயங்கினாலும், அதன் தொடர் இயக்கத்திற்கு ஓர் இயக்கு விசை வேண்டும். நமது உடல் அசைவில் இருந்து அந்த விசையை அது எடுத்துக்கொள்கிறது. இல்லை என்றால் அது இயங்காமல் நின்றுவிடும். நமது உடலும் அப்படித்தான். அதற்கு விசை தேவைப்படுகிறது. அதற்குத்தான் உடற்பயிற்சி.

    தாத்தா உடற்பயிற்சி செய்தாரா?

    அப்படி என்றால் நம்முடைய தாத்தா, பாட்டிகள் காலத்தில் 'ஜிம்' இருந்ததா? அவர்கள் உடற்பயிற்சிகள் செய்தார்களா என்ற கேள்விகள் எழலாம். அதற்கு இல்லை என்றே பதிலும் சொல்லிவிடலாம்.

    ஆனால் அப்போது பாசுமதி அரிசியும், பாலும் பாக்கெட்டுகளில் கிடைக்கவில்லை என்பதை நாம் உணர வேண்டும்.

    அவர்கள் அன்றாட வாழ்க்கையில் உடல் உழைப்பு ஓர் அங்கமாக இருந்தது.

    தாத்தா நிலம் உழுதார். நெல் விளைவித்தார். பசு வளர்த்தார். பால் கறந்தார். தினந்தோறும் தேவைக்கு நெடுந்தூரம் நடந்தார். பாட்டி நெல் குத்தினார். ஆட்டு உரல், அம்மிக்கல் அரைத்தார். நீர் இறைத்தார்.

    இன்று நமது வாழ்க்கை முறை தலைகீழாக மாறிவிட்டதே! தொழில்நுட்பம் வளர வளர, எந்திரங்களும் பெருக பெருக உடல் உழைப்புக்கு ஓய்வு கொடுத்து விட்டோம். அடுத்த தெருவில் இருக்கும் கடையில் மெழுகுவர்த்தி வாங்குவதற்குக்கூட நமது பையன் மோட்டார் சைக்கிளை எடுத்துச் செல்கிறான்.

    மன அழுத்தம்

    நாமோ இருந்த இடத்தில் இருந்து கொண்டே அத்தனை வேலைப்பளுவையும் மூளையில் அள்ளிக்கொட்டிக்கொள்கிறோம். இதனால் மன அழுத்தம். புதுப்புது நோய்களும் நம்மை தொற்றிக்கொள்கின்றன.

    ஒரு காலத்தில் சர்க்கரை நோயை பணக்கார நோய் என்று பெருமையாக கிராமங்களில் பேசுவார்கள். பணம் வைத்திருப்பவர்களுக்கு உடல் உழைப்பு குறைந்து விட்டதால் அந்த நோய் வந்ததை அவர்கள் அறியவில்லை. இன்று உணர்கிறார்கள். உடற்பயிற்சியும் நடைப்பயிற்சியும் அவசியம் என்கிறார்கள். ஆனால் அதை அனைவரும் கடைப் பிடிக்கிறார்களா? இளைஞர்கள் என்ன செய்கிறார்கள்? என்பது பற்றி இவர்கள் கீழே என்ன சொல்கிறார்கள் என்பதை காண்போம்.

    உடற்பயிற்சி செய்வோம்

    நடைப்பயிற்சி, உடற்பயிற்சி என்பது பொதுவாக சர்க்கரை நோய் வந்தவர்கள்தான் செய்கின்றனர். அது தவறு. நடைப்பயிற்சி, உடற்பயிற்சியை எல்லா வயதினரும் முறைப்படி கடைப்பிடித்தால் எந்த நோயும் வராமல் தடுக்க வாய்ப்பு உள்ளது. பூங்காக்கள், கடற்கரை பகுதிகளில் நடைப்பயிற்சி செய்பவர்கள் பெரும்பாலும் மூத்த குடிமக்களாக உள்ளனர். இளம் தலைமுறையினர் எந்திர மயமான வாழ்க்கை வாழ்வதால் அவர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை. ஆனால் சிறிது நேரமாவது நடைப்பயிற்சி, உடற்பயிற்சியை வீட்டிலும் செய்வது நல்லது. இப்போது எல்லாம் வீட்டில் பெடலிங் சைக்கிள் உள்ளிட்ட உடற்பயிற்சி கருவி இருப்பதால் அனைவரும் உடற்பயிற்சி செய்வது நல்லது. 'உடற்பயிற்சி செய்வோம், நோய்கள் வராமல் தடுப்போம்' என்ற குறிக்கோளுடன் செயல்படுவது நல்லது' .

    'உடலும், மனமும் ஆரோக்கியமாக இருக்க தினமும் உடற்பயிற்சி செய்வதன் அவசியம் குறித்து டாக்டர்களும், உடல்நல நிபுணர்களும் வலியுறுத்திக்கொண்டு தான் இருக்கிறார்கள். நடைப்பயிற்சியால் பலன் இருப்பதையும் அறிகிறோம். வீட்டில் பெற்றோர்களும் உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி செய்ய அறிவுறுத்துகின்றனர். இதற்காக ஸ்கிப்பிங் கயிறு, உடலியக்கத்தின் ஒட்டுமொத்த செயல்பாடுகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கக்கூடிய 'ஸ்மார்ட் வாட்ச்' போன்றவையும் வாங்கி ஆகிவிட்டது. ஆனால் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வருவதால் இரவு, பகல் என்று மாறி, மாறி பணி நேரம் வருவதால் நடைப்பயிற்சியும், உடற்பயிற்சியும் நாளைப் பார்த்து கொள்ளலாம் என்று நாட்கள் தள்ளிக்கொண்டே போகிறது.

    'உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்ய வேண்டும் என்ற ஆசை இல்லத்தரசிகளுக்கு இருக்கத்தான் செய்கிறது. ஆனால் என்ன செய்வது, குடும்பத்தில் கணவர், குழந்தைகளை கவனிக்க வேண்டியது இருப்பதால் இவற்றை முறையாக செய்ய முடியவில்லை. இளைஞர்கள் கைகளில் 24 மணி நேரமும் செல்போன் இருப்பதால் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி குறித்த ஆர்வமே இல்லை. பல பள்ளி, கல்லூரிகளில் விளயைாட்டு மற்றும் உடற்பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. குறிப்பாக சி.பி.எஸ்.சி., மெட்ரிக் பள்ளிகளில் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சிகளுக்கு ஊக்கம் தருவதில்லை. மைதானங்களும் குறைவு, பூங்காக்களும் தொலைவில் இருக்கின்றன. இதற்கு ஏற்றாற்போல், இளைஞர்களுக்கும் மதுவில் நாட்டம் அதிகமாகி விட்டதால் எப்படி உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மீது ஆர்வம் வரும்? தற்போது குழந்தைகளுக்கே நீரிழிவு நோய் வருவதால் அனைத்து தரப்பினரும் நடைப்பயிற்சியை மேற்கொள்வது நல்லது. இதுகுறித்து போதிய விழிப்புணர்வும் அளிக்கப்பட வேண்டும்.

    சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வில் 20 முதல் 36 வயது வரை உள்ளவர்கள் ஒரு நாளைக்கு 6 மணி நேரம் செல்போன் பயன்படுத்துவதாக தெரியவந்து உள்ளது. இவர்கள் உடற்பயிற்சி, நடைப்பயிற்சியால் ஏற்படும் பலன்கள் குறித்து முழுமையாக அறியாமல் உள்ளனர். சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் டாக்டர்கள் கூறியதற்கு ஏற்ப உயிருக்கு பயந்து நடைப்பயிற்சியில் ஈடுபடுகின்றனர். பாடப்புத்தகங்களிலும் இதுகுறித்து தகவல்களை இடம் பெற செய்ய வேண்டும்.

    'இளைய தலைமுறையினருக்கு நடைப்பயிற்சி, உடற்பயிற்சியில் ஆர்வம் இல்லாமல் செல்போனே கதி என்று கிடக்கின்றனர். முதியவர்கள் அதுவும் குறிப்பாக சர்க்கரை நோயாளிகள்தான் அதிகம் பேர் நடைப்பயிற்சிக்கு வருகின்றனர். அதுபோல் இல்லாமல் நடைப்பயிற்சி, உடற்பயிற்சியால் ஏற்படும் நன்மைகள் குறித்து பூங்காவில் விழிப்புணர்வு பலகைகள் வைப்பதன் மூலம் இளைஞர்களும் இதில் ஈடுபட வாய்ப்பு உள்ளது.

    புதிய, புதிய நோய்கள் அவ்வப்போது வந்து செல்வதால், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி என்பது மிக முக்கியமாக தேவைப்படுகிறது. இது காலத்தின் கட்டாயமாகவும் இருக்கிறது. குறிப்பாக ஒரு சில இளைஞர்கள் துரித உணவுகளை எப்போதும் உட்கொள்வது மற்றும் மது அருந்துவது உள்ளிட்ட தவறான பழக்கவழக்கங்களில் அடிமையாகி கிடக்கின்றனர். இவர்களை சரியான பாதையில் வழிநடத்த ஆள் இல்லாததால் உடற்பயிற்சி, நடைபயிற்சியில் ஆர்வம் காண்பிப்பதில்லை. நோயற்ற வாழ்வே, குறைவற்ற செல்வம் என்ற பொன்மொழிக்கு ஏற்ப ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க அனைத்து தரப்பு இளைஞர்களும் முன்வர வேண்டும்.

    Next Story
    ×