தவறு செய்பவன் தண்டிக்கப்பட வேண்டும் - துப்பாக்கி முனை விமர்சனம்

தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் விக்ரம் பிரபு - ஹன்சிகா நடிப்பில் வெளியாகி இருக்கும் துப்பாக்கி முனை படத்தின் விமர்சனம். #ThuppakkiMunaiReview #VikramPrabhu #Hansika
தவறு செய்பவன் தண்டிக்கப்பட வேண்டும் - துப்பாக்கி முனை விமர்சனம்
Published on

நாயகன் விக்ரம் பிரபு போலீஸ் அதிகாரியாக இருக்கிறார். இவர் இதுவரைக்கும் 30 பேரை என்கவுண்டர் செய்திருக்கிறார். என்கவுண்டர் என்ற பெயரில் ஒரு உயிரை கொலை செய்வதை விரும்பாத விக்ரம் பிரபுவின் அம்மா, விக்ரம் பிரபுவை விட்டு பிரிந்து விடுகிறார். விக்ரம் பிரபுவோ அம்மா மீது பாசமாக இருந்தாலும், செய்யும் தொழிலை மிகவும் நேசித்து வருகிறார்.

இந்நிலையில், ஹன்சிகாவை பார்க்கும் விக்ரம் பிரபு அவர் மீது காதல் வயப்படுகிறார். இருவரும் தங்களுடைய காதலை வெளிப்படுத்தி பழகி வரும் நிலையில், போலீஸ் வேலையால் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு பிரிகிறார்கள். அதே சமயம், தன்னுடைய வேலையில் இருந்து விக்ரம் பிரபு சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்.

சில நாட்களில் ராமேஸ்வரம் பகுதியில் எம்.எஸ்.பாஸ்கரின் 14 வயது மகளை கற்பழித்து கொலை செய்த வழக்கில் ஒருவரை என்கவுண்டர் செய்ய சொல்லி விக்ரம் பிரபுவுக்கு உத்தரவு வருகிறது.

இதை விசாரிப்பதற்காக ராமேஸ்வரம் செல்லும் இவர், எம்.எஸ்.பாஸ்கர் மூலம், என்கவுண்டர் செய்ய இருக்கும் நபரை பற்றி தெரிந்துக் கொள்கிறார். இதில் தான் என்கவுண்டர் செய்ய இருக்கும் நபர் நிரபராதி என்றும், அந்த சிறுமியை கற்பழித்து கொலை செய்தவர்கள் வேறொருவர் என்பதை தெரிந்து கொள்கிறார்.

இறுதியில் அந்த சிறுமியை கொலை செய்தவரை விக்ரம் பிரபு என்கவுண்டர் செய்தாரா? காதலி ஹன்சிகாவுடன் இணைந்தாரா? தனது என்கவுண்டர் பணியை தொடர்ந்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தின் நாயகனான விக்ரம் பிரபு போலீஸ் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திருக்கிறார். முந்தைய படங்களை விட இந்த படத்தில் நடிப்பில் கூடுதல் கவனம் செலுத்தி நடித்திருக்கிறார். அது சிறப்பாக ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது என்றே சொல்லலாம். தான் செய்யும் வேலையை மிகவும் நேசிப்பவராக மனதில் நிற்கிறார். படம் முழுவதும் ஸ்டைலிஷ் உடைகளில் வந்து கவர்கிறார்.

கதாநாயகி ஹன்சிகா சில காட்சிகளில் மட்டுமே வருகிறார். தேவையில்லாத காட்சிகள் என்று இல்லாமல் சரியான இடத்தில் கதையின் தேவைக்கு ஏற்ப வந்து செல்கிறார். விக்ரம் பிரபுவுக்கு அடுத்தபடியாக நம் மனதில் நிற்பது எம்.எஸ்.பாஸ்கர். அவருக்கே உரிய பாணியில் நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி இருக்கிறார். தன் பெண்ணை இழந்து வாடும் தந்தையாகவும், குற்றவாளிக்கு தண்டனை வழங்க போராடுவதும் என்று நடிப்பில் மிளிர்கிறார். குறிப்பாக இறுதிக் காட்சியில் கைத்தட்டல் பெற்றிருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

பெண்ணை கற்பழித்து கொலை செய்தவரை போலீஸ் எப்படி கண்டுபிடித்து தண்டனை வழங்குகிறது என்ற வழக்கமான கதையாக இருந்தாலும், திரைக்கதையில் வித்தியாசம் காண்பித்து இயக்கி இருக்கிறார் இயக்குனர் தினேஷ் செல்வராஜ். தவறு செய்பவன் சரியான நேரத்தில் தண்டிக்கப்பட வேண்டும், அதே நேரத்தில் நிரபராதிக்கு தண்டனை கிடைக்கக் கூடாது என்பதை படத்தில் உணர்த்தியிருக்கிறார். மெதுவாக திரைக்கதை தொடங்கினாலும், சிறிது நேரத்திலேயே வேகம் எடுத்து சீட்டிலேயே உட்கார வைத்து விடுகிறார் இயக்குனர். கதாபாத்திரங்னளை சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார். இறுதியில் சொல்லும் மெசேஜ் சிறப்பு.

முத்துகணேஷின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையில் அதிக ஸ்கோர் செய்து கவனிக்க வைத்திருக்கிறார். ராசாமதியின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

மொத்தத்தில் ‘துப்பாக்கி முனை’ ஷார்ப். #ThuppakkiMunaiReview #VikramPrabhu #Hansika

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com