பக்கா

எஸ்.எஸ்.சூர்யா இயக்கத்தில் விக்ரம் பிரபு - நிக்கி கல்ராணி - பிந்து மாதவி நடிப்பில் வெளியாகி இருக்கும் `பக்கா' படத்தின் விமர்சனம்.
பக்கா
Published on

தீவிர கிரிக்கெட் ரசிகரான விக்ரம் பிரபு மற்றும் அவரது நண்பர் சதீஷும் டோனியின் அதி தீவிர ரசிகர்கள். அதேபோல் நாயகி நிக்கி கல்ராணி தீவிர ரஜினி ரசிகை. ஒரே ஊரில் இருக்கும் இவர்களுக்கு இடையே அடிக்கடி சண்டை வருகிறது. விக்ரம் அடிக்கடி கிரிக்கெட் போட்டியை நடத்துகிறார். அவருக்கு போட்டியாக நிக்கி கல்ராணி கபடி போட்டியை நடத்துகிறார். 

யார் வைக்கும் போட்டிக்கு கூட்டம் அலை மோதுகிறது என்று இருவரும் மோதி வருகின்றனர். இந்நிலையில், தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலை செய்ய முயற்சிக்கும் பிந்துமாதவியை விக்ரம் பிரபு காப்பாற்றுகிறார். 

விக்ரம் பிரபுவை பார்த்து மகிழ்ச்சி அடைந்த பிந்து மாதவி தான் விக்ரம் பிரபுவை தான் தேடி வந்ததாகவும், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படியும் விக்ரம் பிரபுவிடம் கேட்கிறாள். இதைகேட்டு அதிர்ச்சியடையும் விக்ரம் பிரபு இதற்கு முன்பு பிந்துவை பார்த்ததேயில்லை என்று கூற பிந்து மாதவி அதிர்ச்சியடைகிறாள். 

இதையடுத்து அவளது காதல் குறித்து விக்ரம் பிரபு கேட்க, தான் பெரிய வீட்டு பெண் என்றும், தனது ஊர்த் திருவிழாவில் விக்ரம் பிரபுவும், சூரியும் பொம்மை கடை போட்டதாகவும், அப்போது விக்ரம் பிரபு மீது தனக்கு காதல் வந்ததாகவும், அவர் தனது காதலை ஏற்கவில்லை என்றும் கூறுகிறாள். இந்நிலையில், அவரை பார்க்க இரவில் அவரது இடத்திற்கு சென்ற போது ஊரில் உள்ளவர்கள் தன்னை பார்த்து தனது வீட்டில் சொல்லிக் கொடுத்தனர். 

தனது வீட்டில் கொடுத்த தொல்லை தாங்க முடியாமல் விக்ரம் பிரபுவை தேடி ஊர் ஊராக திருவிழா நடக்கும் ஊர்களுக்கு போவதாகவும் கூறுகிறாள்.  

அவள் சொன்ன கதையை கேட்ட விக்ரம் பிரபு அவளை, அவளது காதலருடன் சேர்த்து வைப்பதாக கூறுகிறார். அதேநேரத்தில் தானும் நிக்கி கல்ராணியை காதலிப்பதாக கூறுகிறார். 

கடைசியில், பிந்து மாதவி தனது காதலர் விக்ரம் பிரபுவுடன் சேர்ந்தாரா? எலியும், பூனையுமாக இருந்த விக்ரம் பிரபுவும், நிக்கி கல்ராணியும் இணைந்தார்களா? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை. 

விக்ரம் பிரபு முதல்முறையாக இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். டோனி ரசிகராகவும், பொம்மை விற்பவராகவும் அவர் கதாபாத்திரத்துடன் ஒன்றியிருக்கிறார். நிக்கி கல்ராணி ரஜினி ரசிகையாக கலக்கியிருக்கிறார். பிந்து மாதவி குடும்ப பெண்ணாக வந்து ரசிக்க வைக்கிறார். சூரி, சதீஷ் காமெடியில் ஓரளவுக்கு கைகொடுக்கின்றனர். ஆனந்த்ராஜ், நிழல்கள் ரவி, சிங்கம் புலி, ரவி மரியா என மற்ற கதாபாத்திரங்களும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளனர். 

படத்தின் திரைக்கதையில் இசைக்கு கூட இடமில்லாமல் வசனமாக பேசி பேசியே போரடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் எஸ்.எஸ்.சூர்யா. படத்தின் கதை ஏற்றுக் கொள்ளும்படியாக இருந்தாலும், திரைக்கதையின் போக்கு போரடிக்க வைக்கிறது. காமெடியும் பெரிதாக எடுபடவில்லை. படத்திற்காக மெனக்கிட்டிருக்கலாம். 

சி.சத்யாவின் பின்னணி இசை படத்திற்கு ஓரளவு வலுசேர்த்திருக்கிறது. பாடல்கள் சுமார் ரகம் தான். எஸ்.சரவணனின் ஒளிப்பதிவில் காட்சிகள் ரம்மியமாக வந்திருக்கிறது. காட்சி விருந்து என்று சொல்லலாம். 

மொத்தத்தில் `பக்கா' பக்காவாக இல்லை. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com