உலகம்

அதிகாரிகளின் பயணத்தை ரத்து செய்த நேதன்யாகு: குழப்பம் அடைந்த அமெரிக்கா

Published On 2024-03-26 06:45 GMT   |   Update On 2024-03-26 06:45 GMT
  • ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வாக்கெடுப்பை அமெரிக்கா புறக்கணித்தது.
  • போர் தொடங்கியபோது இருந்த நிலையில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக இஸ்ரேல் கருதுகிறது.

காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ரம்ஜானை முன்னிட்டு இடைக்கால போர் நிறுத்தம் தேவை என உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதோடு ரஃபா நகர் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது. இதில் அமெரிக்காவுக்கு உடன்பாடு இல்லை.

அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவிடம் தனது அதிருப்தியை தெரிவித்திருந்தார். ஆனால், ஹமாஸ்க்கு எதிரான போரில் இலக்கை அடைவதற்கு ரஃபா மீது தாக்குதல் நடத்துவது அவசியம் என நேதன்யாகு தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக தங்களது அதிகாரிகளை பேச்சுவார்த்தைக்காக அமெரிக்கா அனுப்பி வைக்க நேதன்யாகு முடிவு செய்தார். இருநாட்டு ராணுவ அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்த இருந்தனர்.

இந்த நிலையில்தான் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உடனடி போர் நிறுத்தத்திற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுவரை இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து வந்த அமெரிக்கா, இந்த முறை வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தவில்லை. மேலும், வாக்கெடுப்பை புறக்கணித்தது. இதனால் 15 உறுப்பினர்கள் கொண்ட பாதுகாப்பு கவுன்சிலில் 14 உறுப்பினர் நாடுகள் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனால் இஸ்ரேல் அமெரிக்கா மீது அதிருப்தி அடைந்துள்ளது. போர் தொடங்கியதுபோது இருந்த தங்களது நிலைப்பாட்டில் இருந்து தற்போது அமெரிக்கா வெளியேறியதாக கருதுகிறது. இதனால் பேச்சுவார்த்தை தொடர்பாக அமெரிக்கா செல்ல இருந்து இஸ்ரேல் அதிகாரிகள் பயணத்தை நேதன்யாகு ரத்து செய்துள்ளார்.

நேதன்யாகு நடவடிக்கையால் வெள்ளை மாளிகை குழப்பம் அடைந்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு தகவல்தொடர்பு ஆலோசகர் ஜான் கிர்பி கூறுகையில் "இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவின் முடிவு வெள்ளை மாளிகைக்கு குழப்பதை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல பிரதமர் நேதன்யாகுவின் அலுவலகம், அமெரிக்கா மாறிவிட்டதாக தெரிவித்துள்ளது. ஆனால், ஜோ பைடனின் நிர்வாகம் தங்களது அணுகுமுறையில் இருந்து மாறவில்லை.

நாங்கள் சில கருத்துகளை விளக்க வேண்டிய நிலை உள்ளது. இது நான்பைண்டிங் தீர்மானம் (NonBinding Resolution). ஹமாஸ்க்கு எதிரான இஸ்ரேல் மற்றும் இஸ்ரேல் திறனை இது எந்த வகையிலும் பாதிக்காது." என்றார்.

Tags:    

Similar News