தமிழ்நாடு

பெண்களால் எல்லா துறையிலும் சாதிக்க முடியும்: அரசு போக்குவரத்து கழக பெண் கண்டக்டர்

Published On 2024-03-28 05:21 GMT   |   Update On 2024-03-28 05:39 GMT
  • பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் நடந்த விழாவில், ரம்யாவுக்கு அமைச்சர் சிவசங்கர் பணிநியமன ஆணையை வழங்கினார்.
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் தற்போது வேலை கிடைத்துள்ளது.

மதுரை:

மதுரை கோ.புதூர் லூர்து நகரை சேர்ந்தவர் பாலாஜி (வயது 44). கும்பகோணம் கோட்ட அரசு போக்குவரத்து கழகத்தில், மதுரை உலகனேரி கிளையில் டிரைவராக பணியாற்றி வந்தார். கொரோனா காலத்தின்போது அவர் பணியில் ஈடுபட்டார். அதில், அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது இழப்பால், போதிய வருமானமின்றி அவரது மனைவி ரம்யா (38) மற்றும் மகள் ராகவி (14) ஆகியோர் செய்வதறியாது திகைத்தனர்.

அந்த சமயத்தில், கருணை அடிப்படையில் தனக்கு வாரிசு வேலை வழங்க வேண்டும் எனக் கூறி ரம்யா போக்குவரத்து கழகத்தில் விண்ணப்பித்தார். தன்னுடைய நிலையை விளக்கி கூறி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், கருணை அடிப்படையில் பணி வழங்ககோரி விண்ணப்பம் செய்தார். இதனை தொடர்ந்து அவரது மனு குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கருக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில், அவரது கல்வி தகுதிக்கு ஏற்ப உடனடியாக பணி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சரும் பரிந்துரைத்தார். இதனை அடுத்து நேர்முக தேர்வு நடத்தப்பட்டு, அவரது கல்வி தகுதிக்கு ஏற்ப கண்டக்டர் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

கடந்த 14-ந்தேதி பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் நடந்த விழாவில், ரம்யாவுக்கு அமைச்சர் சிவசங்கர் பணிநியமன ஆணையை வழங்கினார். அதன்பின்னர், மதுரை வந்த ரம்யா, மதுரை உலகனேரில் உள்ள தன் கணவர் பணிபுரிந்த அதேகிளையில் கண்டக்டராக பொறுப்பேற்றார். அவருக்கு மதுரை-ராமநாதபுரம் செல்லும் பஸ்சில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த பணியை அவர் திறம்பட செய்து, மக்களின் நன்மதிப்பை பெற்று வருகிறார். அரசு பஸ்சில் பெண் கண்டக்டரா என ஆச்சரியப்படுத்தும் அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து ரம்யா கூறியதாவது:-

கணவர் இறந்த பிறகு குடும்பம் நடத்துவதற்கே மிகவும் சிரமப்பட்டேன். இதற்கு முன்பு தனியார் ஆஸ்பத்திரியில் பணி செய்தேன். இருப்பினும் அந்த சம்பளத்தை வைத்து குடும்பத்தை நடத்த முடியவில்லை. அதனால், வாரிசு வேலை கிடைக்குமா? என முயற்சித்தேன். 11-ம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கிறேன். மேலும் டிரைவர் வேலையை தவிர எந்த வேலை கொடுத்தாலும் செய்ய தயாராக இருப்பதாகவும் கூறியிருந்தேன்.

அதன்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் தற்போது வேலை கிடைத்துள்ளது. 10 நாட்கள் பயிற்சியை முடித்து தற்போது பணியை தொடங்கி இருக்கிறேன். பெண் கண்டக்டர் என்பதால் எல்லோரும் என்னை வித்தியாசமாகவும், பெருமையாகவும் பார்க்கிறார்கள்.

பெண்களால் எல்லா துறையிலும் சாதிக்க முடியும் என நம்புகிறேன். எந்த சிரமங்கள் இருந்தாலும், என் பணியை சிறப்பாக செய்வேன் என்ற மன தைரியம் உள்ளது. உடன் வேலை செய்பவர்களும் ஆதரவு தருகிறார்கள் என்றார். 

Tags:    

Similar News