தமிழ்நாடு

நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு... மாணவ, மாணவிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள்

Published On 2024-05-05 02:21 GMT   |   Update On 2024-05-05 02:21 GMT
  • ஆடை கட்டுப்பாடுகள், முடி, ஷூ, பெல்ட் அணிதல் போன்றவை வழக்கம் போல் பின்பற்றப்படுகிறது.
  • தேர்வு மையத்திற்கு செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டு வர தடைவிதிக்கப்பட்டுள்ளது.

சென்னை:

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது.

அயல்நாடுகள் உள்ளிட்ட நாடு முழுவதும் 557 நகரங்களில் 24 லட்சம் பேர் இத்தேர்வை எழுதுகிறார்கள். தேர்வு பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணி வரை நடக்கிறது. தமிழகத்தில் சுமார் 1 ½ லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, கடலூர், கரூர், தர்மபுரி, ஈரோடு, சேலம், தூத்துக்குடி, மதுரை, திண்டுக்கல், கன்னியாகுமரி, வேலூர், தஞ்சாவூர், விழுப்புரம், நீலகிரி, திருவாரூர், திருவண்ணாமலை, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்பட 31 நகரங்களில் நீட் தேர்வு நடக்கிறது.

இந்த தேர்வு தமிழ், ஆங்கிலம் உள்பட 13 மொழிகளில் நடைபெறுகிறது. தேர்வு கூடத்திற்கு அரைமணி நேரத்திற்கு முன்னதாக மாணவர்கள் வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நீட் தேர்வுக்கான வழிமுறைகளை மாணவ-மாணவிகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். ஆடை கட்டுப்பாடுகள், முடி, ஷூ, பெல்ட் அணிதல் போன்றவை வழக்கம் போல் பின்பற்றப்படுகிறது.

தேர்வு மையத்திற்கு செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டு வர தடைவிதிக்கப்பட்டுள்ளது.

பதட்டம் இல்லாமல் இருக்க முன் கூட்டியே வரவும் தேர்வு அனுமதி சீட்டுடன் புகைப்படம் கொண்டு வரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோடை வெயில் வறுத்து எடுத்து வரும் வேளையில் இத்தேர்வு நடைபெறுகிறது. தேர்வு எழுதும் நகரங்களில் தேர்வர்கள் தவிர வேறு யாரையும் அனுமதிக்கக்கூடாது என்று தேசிய தேர்வு முகமை அதிரடி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. உறவினர்கள் மையங்களுக்கு வெளியே இருக்க வேண்டும் எனவும் தேவையான அளவு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யவும் தேர்வு நடத்தும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தேர்வு கூடங்களில் ஒழுங்கீனங்கள் தவறுகள் நடக்காமல் இருக்க தீவிர கண்காணிப்பு அவசியம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்வு அறையில் முறைகேட்டில் ஈடுபடும் மாணவர்களை கண்காணிக்க தேசிய தேர்வுகள் முகமை, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. முறைகேட்டில் ஈடுபடும் மாணவர்கள் அடுத்த 3 ஆண்டுகள் தேர்வு எழுத தடை விதிக்கப்படும். மேலும், அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

Tags:    

Similar News