தமிழ்நாடு

புதிய தலைமை செயலக கட்டிடம் முறைகேடு: மேல்முறையீட்டு வழக்கை திரும்ப பெற அரசுக்கு அனுமதி

Published On 2024-03-28 07:35 GMT   |   Update On 2024-03-28 07:35 GMT
  • ஆணையம் சேகரித்த ஆதாரங்களில் முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு உத்தரவிட்டது.
  • வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் குமரேஷ் பாபு ஆகியோர் தீர்ப்பு அளித்தனர்.

சென்னை:

2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை நடந்த தி.மு.க., ஆட்சி காலத்தில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது.

இந்த புதிய தலைமைச் செயலகத்தை கட்டியதில் நடந்த முறைகேடு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி ஆர்.ரகுபதி ஆணையத்தை கலைத்த சென்னை ஐகோர்ட்டு, ஆணையம் சேகரித்த ஆதாரங்களில் முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில் அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த ஐகோர்ட்டு அந்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது.

இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்தது. தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், இந்த மேல்முறையீட்டு வழக்கை திரும்ப பெறுவதாக அரசு தரப்பில் முறையிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., ஜெயவர்தன் மனுத்தாக்கல் செய்தார்.

அதில், இந்த வழக்கில் தன்னை ஒரு மனுதாரராக சேர்த்து விசாரிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் குமரேஷ் பாபு ஆகியோர் இன்று காலையில் தீர்ப்பு அளித்தனர்.

அதில், இந்த மேல்முறையீட்டு வழக்கை தொடர்ந்து நடத்தும் படி அரசுக்கு இந்த ஐகோர்ட்டு நிர்பந்தம் செய்ய முடியாது. எனவே, மேல்முறையீட்டு வழக்கை திரும்ப பெற அரசுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அதேநேரம், வழக்கை திரும்ப பெற அனுமதிக்கக் கூடாது என்று ஜெயவர்தன் மனு மீது உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது. தள்ளுபடி செய்கிறோம் என்று கூறியுள்ளனர்.

Tags:    

Similar News