தமிழ்நாடு

தேனியில் யூ டியூபர் சவுக்கு சங்கர் கைது

Published On 2024-05-04 01:59 GMT   |   Update On 2024-05-04 04:31 GMT
  • தேனியில் ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
  • மாற்று வாகனம் மூலம் சவுக்கு சங்கரை போலீசார் கோவை அழைத்து சென்றனர்.

தேனி:

தமிழக காவல் துறை அதிகாரிகள், பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதையடுத்து அவரை கைது செய்யும் நடவடிக்கையில் கோவை போலீசார் ஈடுபட்டனர்.

இந்நிலையில் சவுக்கு சங்கர் தேனி வந்திருப்பதாக கிடைத்த தகவலையடுத்து இன்று (சனிக்கிழமை) அதிகாலை 3 மணியளவில் தேனியில் ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து அவரை போலீசார் வேனில் கோவைக்கு அழைத்து சென்றனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஐ.டி.ஐ. கார்னர் பகுதியில் செல்லும்போது, அந்த வழியாக வந்த காரும், வேனும் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் கார் சுக்குநூறாக நொறுங்கியது. போலீஸ் வேனின் முன்பகுதி சேதமடைந்தது.

இந்த விபத்தில் வேனில் இருந்த போலீஸ்காரர் ஒருவர் மற்றும் சவுக்கு சங்கர் ஆகியோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. சவுக்கு சங்கருக்கு உதடு மற்றும் காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மாற்று வாகனம் மூலம் சவுக்கு சங்கரை போலீசார் கோவை அழைத்து சென்றனர். காரில் வந்த நபருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். கைதான சவுக்கு சங்கரை அழைத்து சென்ற போலீஸ் வாகனம் விபத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News