தமிழ்நாடு

பூங்கோதை - ஷாரூக் - ஹரினி பிரியா - திவ்யா ஸ்ரீ

பிளஸ்-2 தேர்வு: சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்கள் அபார சாதனை

Published On 2024-05-06 10:02 GMT   |   Update On 2024-05-06 10:02 GMT
  • ஏழை, எளிய கூலி தொழிலாளர்கள் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் தான் மாநகராட்சி பள்ளியில் படிக்கின்றனர்.
  • முதலிடம் பெற்ற மாணவி பூங்கோதை ஆட்டோ டிரைவரின் மகள் ஆவார்.

சென்னை:

பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று வெளியானது. இதில் சென்னை மாநகராட்சி பள்ளி மாணவிகள் அபார சாதனை படைத்துள்ளனர்.

4998 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதியதில் 4355 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது 87.13 சதவீதமாகும். கடந்த ஆண்டைவிட 0.27 சதவீதம் தேர்ச்சி அதிகரித்துள்ளது.

சென்னை மாநகராட்சி சார்பாக செயல்படும் 35 மேல்நிலைப் பள்ளிகளில் நுங்கம்பாக்கம் பள்ளி மட்டுமே 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

ஏழை, எளிய கூலி தொழிலாளர்கள் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் தான் மாநகராட்சி பள்ளியில் படிக்கின்றனர். அவர்களிலும் தனித்திறன் மிக்க கற்றல் திறன் உள்ள குழந்தைகள் பலர் உள்ளனர் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டாகும்.

பல்வேறு பாடங்களிலும் மாணவ-மாணவிகள் 100-க்கு 100 எடுத்து சாதனை படைத்துள்ளனர். வணிகவியல் பாடத்தில் 16 பேர், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்-14, பொருளாதாரம்-12, கணினி அறிவியல்-9, கணக்குப் பதிவியல்-2, புவியியல், கணிதம், விலங்கியல் பாடங்களில் தலா ஒருவர் வீதம் நூற்றுக்கு நூறு பெற்றுள்ளனர்.

மாநகராட்சி பள்ளிகளில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி பூங்கோதை பெரம்பூர் மாதவரம் நெடுஞ்சாலையில் உள்ள பெண்கள் பள்ளியில் படித்தவர். இந்த மாணவி 600-க்கு 578 மதிப்பெண் பெற்றார். பள்ளியிலும் முதல் மாணவியாக வெற்றி பெற்றுள்ளார். 2-வது இடத்தில் கொளத்தூர் மாநகராட்சி பள்ளி மாணவர் ஷாரூக் 575 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்தார். 3-வதாக பெரம்பூர் மாதவரம் நெடுஞ்சாலை பள்ளி மாணவிகள் ஹரினி பிரியா, திவ்யா ஸ்ரீ ஆகியோர் 573 மதிப்பெண்ணை பெற்றுள்ளனர்.

முதலிடம் பெற்ற மாணவி பூங்கோதை ஆட்டோ டிரைவரின் மகள் ஆவார். அவரது தந்தை பார்த்திபன். தாயார் சிவகாமி வீட்டு வேலை செய்து வருகிறார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த பூங்கோதை சிறு வயது முதலே படிப்பில் சுட்டி.

மாணவி பூங்கோதை கூறியதாவது:-

ஏழை குடும்பத்தில் பிறந்தவள் நான். இவ்வளவு மதிப்பெண் பெறுவதற்கு எனது ஆசிரியைகள்தான் காரணம். என்னை ஊக்கப்படுத்தினார்கள். எப்போது சந்தேகம் கேட்டாலும் மனம் கோணாமல் சொல்லித் தருவார்கள். வீட்டில் அதிகமாக படிக்க மாட்டேன். இரவு 10 முதல் 11 மணி வரை மட்டுமே வீட்டில் படிப்பேன். பள்ளியில்தான் முழுமையாக படிப்பேன். சிறப்பு வகுப்பு எனக்கு மிகவும் பயன் உள்ளதாக இருந்தது. படிப்பிற்காக 6 மாதமாக டி.வி. பார்க்கவில்லை. காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளியில் இருந்து படிப்பேன்.

பி.காம் அக்கவுண்டன்ஸ் அல்லது பைனாஸ் படிக்க ஆசைப்படுகிறேன். அம்மா வீட்டு வேலை செய்தும் அப்பா ஆட்டோ ஓட்டியும் குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாணவி பெற்ற மதிப்பெண் விவரம் தமிழ்-94, ஆங்கிலம்-89, பொருளாதாரம்-100, வணிகவியல்-100, கணக்குப் பதிவியல்-96, கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்-99.

கொளத்தூர் பள்ளி மாணவர் ஷாரூக் தமிழ்-97, ஆங்கிலம்-88, இயற்பியல்-93, வேதியியல்-98, கணினி அறிவியல்-100, கணிதம்-99, இவரது தந்தை ஷானவாஸ் எலக்ட்ரிஷன் ஆவார். 3-வது இடம் பிடித்த திவ்யாஸ்ரீ தந்தை காவலாளியாக வேலை பார்க்கிறார். அவர் பி.பி.ஏ. படிக்க வேண்டும் என்பதே ஆசை என்று தெரிவித்தார். சாதனை படைத்த மாணவிகளை பெரம்பூர் தலைமை ஆசிரியர் செல்வகுமாரி பாராட்டினார்.

Tags:    

Similar News