தமிழ்நாடு

'நீட்' தேர்வு எப்படி இருந்தது?- மாணவ, மாணவிகள் கருத்து

Published On 2024-05-06 02:54 GMT   |   Update On 2024-05-06 02:54 GMT
  • ‘நீட்’ தேர்வு வினாத்தாள் எளிதாக இருந்தது.
  • தேர்வில் உயிரியியல் பாடத்தில் இருந்து கேட்கப்பட்ட வினாக்கள் எளிதாக இருந்தது.

மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை 'நீட்' நுழைவுத்தேர்வின் அடிப்படையில் நடத்தப்படுகிறது. அந்த வகையில், வரும் கல்வியாண்டுக்கான 'நீட்' தேர்வு நாடு முழுவதும் நேற்று நடந்தது.

தமிழகத்தில் 'நீட்' தேர்வை 1½ லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினார்கள். இதில், இயற்பியல் பாடத்துக்கான வினாக்கள் சற்று கடினமாக இருந்ததாக மாணவ, மாணவிகள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

சென்னை ஆயிரம் விளக்கு பகுதிகளில் உள்ள தேர்வு மையத்தில் இருந்து வெளியே வந்த மாணவ, மாணவிகளிடம் தேர்வு குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் அளித்த பதில் வருமாறு:-

சென்னையை சேர்ந்த வர்ஷினி:-

'நீட்' தேர்வு வினாத்தாள் எளிதாக இருந்தது. உயிரியல் மற்றும் வேதியியல் பாடங்களில் இருந்து கேட்கப்பட்ட வினாக்கள் மிகவும் எளிமையாக இருந்தது. ஆனால், இயற்பியல் பாடத்தில் இருந்து கேட்கப்பட்ட வினாக்கள் சற்று கடினமாக இருந்தது. நான் எதிர்பார்த்த மதிப்பெண் நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

சென்னையை சேர்ந்த விஷாலினி:-

நான் மாநில பாடத்திட்டத்தில் படித்தேன். முதல் முறையாக நீட் தேர்வை எதிர்கொள்கிறேன். வினாத்தாள் ஓரளவுக்கு பரவாயில்லை. இயற்பியல் பாடத்தில் பகுதி 'பி' கடினமாக இருந்தது. பல்வேறு தீர்வுகளுக்கு விடை அளிக்கும் வகையில் வினாக்கள் இடம் பெற்றிருந்தன. வேதியியல் மற்றும் உயிரியல் பாடத்தில் இருந்து கேட்கப்பட்ட வினாக்கள் எளிதாக இருந்தது. வினாக்கள் பெரும்பாலும் சி.பி.எஸ்.இ தரத்திலேயே கேட்கப்பட்டிருந்தன. மாநில பாடத்திட்டம் போல் இல்லாமல் தீர்வுகள் அதிகம் இடம் பெற்றிருந்தது.

அரசு பள்ளி மாணவர் சுரேந்தர்:-

கன்னிகாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்தேன். தேர்வு முடிவுக்காக காத்திருக்கிறேன். மருத்துவராக வேண்டும் என்று ஆசை. அதற்காக, நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தேன். அரசின் உண்டு, உறைவிடத்துடன் கூடிய நீட் பயிற்சியில் சேர்ந்து படித்தேன். தேர்வில் உயிரியியல் பாடத்தில் இருந்து கேட்கப்பட்ட வினாக்கள் எளிதாக இருந்தது. இயற்பியல் மற்றும் வேதியியல் பாடத்தில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகளும் விடை அளிக்கும் வகையில் அமைந்தது. நல்ல மதிப்பெண் கிடைக்கும் என்று நம்பிக்கை உள்ளது.

Tags:    

Similar News