விளையாட்டு

பெங்களூரு கேப்டன் பிளிஸ்சிஸ் - ஐதராபாத் கேப்டன் கம்மின்ஸ்

சரிவில் இருந்து மீளுமா பெங்களூரு?: ஐதராபாத் அணியுடன் இன்று மோதல்

Published On 2024-04-15 04:36 GMT   |   Update On 2024-04-15 04:36 GMT
  • பெங்களூரு அணியில் பேட்டிங்கில் விராட்கோலி (319 ரன்) அபாரமாக செயல்பட்டு ரன் குவிப்பில் முதலிடத்தில் இருக்கிறார்.
  • பெங்களூரு மைதானம் பேட்டிங்குக்கு அனுகூலமானது என்பதால் ரன் மழையையும் எதிர்பார்க்கலாம்.

பெங்களூரு:

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (திங்கட்கிழமை) பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் 30-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியை சந்திக்கிறது.

பெங்களூரு அணி தனது முதல் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையிடம் வீழ்ந்தது. அடுத்த ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை பதம் பார்த்தது. அதன் பிறகு 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவிடமும், 28 ரன் வித்தியாசத்தில் லக்னோவிடமும், 6 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானிடமும், 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையிடமும் அடுத்தடுத்து தோல்வி கண்டு புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் தத்தளித்து வருகிறது.

பெங்களூரு அணியில் பேட்டிங்கில் விராட்கோலி (319 ரன்) அபாரமாக செயல்பட்டு ரன் குவிப்பில் முதலிடத்தில் இருக்கிறார். கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ், தினேஷ் கார்த்திக், ரஜத் படிதார் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். அதிரடி ஆட்டக்காரர் மேக்ஸ்வெல் 32 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறுவது அந்த அணிக்கு தலைவலியாக இருக்கிறது. மேலும் அந்த அணியின் பந்து வீச்சு மெச்சும் வகையில் இல்லை. ஆடுகளத்தின் தன்மைக்கு தகுந்தபடி கட்டுக்கோப்பாக பந்து வீசி எதிரணியை கட்டுப்படுத்த முடியாமல் பவுலர்கள் திணறுகின்றனர்.

மும்பைக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் பெங்களூரு அணி முதலில் ஆடி 196 ரன்கள் எடுத்தாலும், அடுத்து ஆடிய மும்பை அணி 15.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு அந்த இலக்கை எளிதாக எட்டிப்பிடித்தது. இது பெங்களூரு அணியின் பந்து வீச்சு பலவீனத்துக்கு ஒரு உதாரணமாகும். முகமது சிராஜ், ரீஸ் டாப்லே, விஜய்குமார் வைஷாக் உள்ளிட்ட பந்து வீச்சாளர்கள் தங்களது தவறுகளை சரிசெய்து ஒட்டுமொத்தமாக எழுச்சி காண வேண்டியது அவசியமானதாகும்.

ஐதராபாத் கணிக்க முடியாத ஒரு அணியாக விளங்குகிறது. தனது தொடக்க ஆட்டத்தில் 4 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தாவிடம் வீழ்ந்த அந்த அணி அடுத்த ஆட்டத்தில் மும்பைக்கு எதிராக 277 ரன்கள் குவித்து சாதனை படைத்ததுடன் 31 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால் 3-வது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்திடம் பணிந்தது. அதன் பிறகு 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையையும், 2 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப்பையும் வீழ்த்தியது.

ஐதராபாத் அணியில் பேட்டிங்கில் ஹென்ரிச் கிளாசென், அபிஷேக் ஷர்மா, டிராவிஸ் ஹெட், மார்க்ரமும், பந்து வீச்சில் கம்மின்ஸ், நடராஜன், புவனேஷ்வர் குமார், ஜெய்தேவ் உனட்கட்டும் வலுசேர்க்கிறார்கள். சுழற்பந்து வீச்சாளர்கள் ஷபாஸ் அகமது, மயங்க் மார்கண்டே ஏற்றம் பெற வேண்டியது தேவையான ஒன்றாகும்.

சரிவில் இருந்து மீண்டு வர பெங்களூரு அணி எல்லா வகையிலும் முயற்சிக்கும். அதேநேரத்தில் தங்கள் அதிரடியை தொடர ஐதராபாத் அணி முனைப்பு காட்டும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. பெங்களூரு மைதானம் பேட்டிங்குக்கு அனுகூலமானது என்பதால் ரன் மழையையும் எதிர்பார்க்கலாம்.

இவ்விரு அணிகளும் இதுவரை 22 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 12 ஆட்டத்தில் ஐதராபாத்தும், 10 ஆட்டத்தில் பெங்களூருவும் வெற்றி பெற்று இருக்கின்றன.

இந்த போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

பெங்களூரு: விராட் கோலி, பாப் டு பிளிஸ்சிஸ் (கேப்டன்), வில் ஜாக்ஸ், ரஜத் படிதார், மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக், மஹிபால் லோம்ரோர், விஜய் குமார் வைஷாக், ஆகாஷ் தீப், ரீஸ் டாப்லே, முகமது சிராஜ்.

ஐதராபாத்: டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா, மார்க் ரம், நிதிஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், அப்துல் சமத், ஷபாஸ் அகமது, கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷ்வர் குமார், ஜெய்தேவ் உனட்கட், நடராஜன்.

இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. 

Tags:    

Similar News