இந்தியா

60 ஆண்டுக்கு பிறகு மனைவிக்கு தாலிகட்டிய 80 வயது முதியவர்

Published On 2024-04-30 05:09 GMT   |   Update On 2024-04-30 05:09 GMT
  • தனது ஆசையை தனது கணவரிடம் கூற இந்த வயதில் தாலி கட்டி என்ன செய்யப் போகிறோம் எனக் கூறினார்.
  • விடாப்பிடியாக மூதாட்டி தனது ஆசையை நிறைவேற்றியே தீர வேண்டும் என அடம்பிடித்தார்.

தெலுங்கானா மாநிலம் மாவட்டம் மகபூபாபாத் தாண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் சமீதா நாயக் (வயது 80). இவரது மனைவி கோகுலத் லாலி (70).

தம்பதியினர் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

அப்போது காதல் வயப்பட்ட இருவரும் பெற்றோரின் கடும் எதிர்ப்பை தாண்டி திருமணம் செய்து கொண்டனர். ஆனால் அவர்களது பெற்றோர் அவர்களை சேர்த்துக் கொள்ளவில்லை. இருவரும் அந்த காலத்தில் கந்தர்வ முறைப்படி மாலை மாற்றி மட்டும் திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.

காலப்போக்கில் கடுமையாக உழைத்து மனைவியை காப்பாற்றி வந்த நாயக் அதன் பிறகு மகன்கள், மகள்களுக்கு, திருமணம் செய்து வைத்தார்.

இப்படியே காலம் உருண்டோட குடும்பம் பேரன், பேத்திகள் என பெரிதாகி விட்டது. 60 ஆண்டுகள் ஆனாலும் தனது கணவர் தனக்கு தாலி கட்டவில்லையே என்ற ஏக்கம் கோகுலத் லாலிக்கு ஏற்பட்டது.

தனது ஆசையை தனது கணவரிடம் கூற இந்த வயதில் தாலி கட்டி என்ன செய்யப் போகிறோம் எனக் கூறினார்.

ஆனாலும் விடாப்பிடியாக மூதாட்டி தனது ஆசையை நிறைவேற்றியே தீர வேண்டும் என அடம்பிடித்தார்.

இதையடுத்து தனது பிள்ளைகளிடமும் பேரன், பேத்திகளிடமும் கூற அவர்களும் மகிழ்ச்சியுடன் இதனை ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து உறவினர்கள் புடை சூழ திருமணம் நடந்தது. 60 ஆண்டுகளாக தன்னுடன் மனைவியாக வாழ்ந்த மூதாட்டிக்கு உற்றார் உறவினர் மட்டுமல்லாது தான் பெற்ற பிள்ளைகள், பேரன், பேத்திகள் முன்னிலையில் கை நடுங்கியபடி முதியவர் தாலி கட்டினார்.

அப்போது மணப்பெண் அலங்காரத்தில் இருந்த மூதாட்டி வெட்கத்தில் தலை குனிந்தார்.

தொடர்ந்து அக்கினியை வலம் வந்து தனது மனைவியாக ஏற்றுக்கொண்டார்.

தொடர்ந்து அம்மி மிதித்து அருந்ததி பார்த்து பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெற்றது.

இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு தம்பதியை வாழ்த்தினர்.

அவர்களிடம் மகன், மகள்கள், பேரன், பேத்திகள் ஆசிபெற்றனர்.

Tags:    

Similar News