சேலம் ஆத்தூரில் 5 மணி நேரம் கொட்டி தீர்த்த கன மழை
- மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது.
- அதிக பட்சமாக ஆத்தூரில் 96.4 மி.மீ. மழை பெய்துள்ளது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக 5-வது நாளாக நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது. குறிப்பாக ஆத்தூர், கரியகோவில், நத்தகரை, சங்ககிரி, மேட்டூர் உள்பட பல பகுதிகளில் நேற்றிரவு கன மழை பெய்தது.
குறிப்பாக ஆத்தூரில் நேற்றிரவு 9 மணிக்கு தொடங்கிய மழை இன்று அதிகாலை 2 மணி வரை கன மழையாக கொட்டியது. 5 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கன மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. இன்று காலையும் மழை தூறிய படியே இருந்தது.
இதே போல நத்தக்கரை சங்ககிரி, கரியகோவில், மேட்டூர், தம்மம்பட்டி, கெங்கவல்லி உள்பட பல பகுதிகளிலும் மழை பெய்தது. சேலம் மாநகரில் நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கிய சாரல் மழை இன்று காலையிலும் தூறலாக நீடித்தது.
மழையை தொடர்ந்து சேலம் மநாகர் மற்றும் புறநகர் பகுதிகளில குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பொது மக்கள் நிம்மதியாக தூங்கினர். மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மாவட்டத்தில் அதிக பட்சமாக ஆத்தூரில் 96.4 மி.மீ. மழை பெய்துள்ளது. நத்தக்கரை-31, கரியகோவில்-26, சங்ககிரி-20, சேலம்-3.7, ஏற்காடு-4.4, ஆனைமடுவு-19, கெங்கவல்லி-6, தம்மம்படடி-10, ஏத்தாப்பூர்-2, வீரகனூர்-9, எடப்பாடி-4, மேட்டூர்-18.2, ஓமலூர்-4.2, மி.மீ. என மாவட்டம் முழுவதும் 253.9 மி.மீ. மழை பெய்துள்ளது., இன்று காலையும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை தூறிய படியே இருந்தது.