அழகுக் குறிப்புகள்

சருமத்தை பாதிக்கும் பொருட்கள்

Published On 2024-02-04 08:08 GMT   |   Update On 2024-02-04 08:08 GMT
  • பல்வேறு விதமான அழகு சாதன பொருட்கள் பயன்பாட்டில் இருக்கின்றன.
  • சில பொருட்கள் எல்லாவகையான சருமத்திற்கும் ஒத்துக்கொள்ளாது.

காலாவதி சன்ஸ்கிரீன்:

சரும அழகை மேம்படுத்துவதற்கு பல்வேறு விதமான அழகு சாதன பொருட்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. ஒரு சில பொருட்கள் எல்லாவகையான சருமத்திற்கும் ஒத்துக்கொள்ளாது. அப்படி இருக்க சிலர் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் சிலவற்றை சருமத்திற்கு பயன்படுத்துவார்கள். அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அவற்றை ஏன் தவிர்க்க வேண்டும் என்பது பற்றியும் பார்ப்போம்.

கோடை காலத்தில் மட்டுமே சன்ஸ்கிரீன் பயன்படுத்துபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். வெயிலின் உக்கிரம் குறையத்தொடங்கியதும் அதனை பயன்படுத்துவதை நிறுத்திவிடுவார்கள். அடுத்த ஆண்டு கோடை காலத்திற்கு பயன்படுத்துவதற்காக பாதுகாத்து வைப்பார்கள். அப்படி சேமித்து வைக்கும்போது காலாவதி தேதியை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். அதனை கவனிக்காமல் காலாவதியான சன்ஸ்கிரீனை மீண்டும் பயன்படுத்தினால் சரும ஒவ்வாமை பிரச்சினை ஏற்படும்.

 பற்பசை:

சிலர் முகத்தில் ஏற்படும் முகப்பரு, கரும்புள்ளிகளை போக்குவதற்கு பல் துலக்க பயன்படும் பற்பசையை பயன்படுத்துவார்கள். அதனை சருமத்தில் உபயோகிப்பது சிலருக்கு சரும ஒவ்வாமை பிரச்சினையை உண்டாக்கும். மெலனின் உற்பத்தி அதிகமாகி சருமத்தில் நிறமாற்றமோ அல்லது கரும்புள்ளிகளோ உருவாகலாம். சரும எரிச்சல் பிரச்சினைகளையும் உண்டாக்கலாம். முகப்பருக்கள் மீது பற்பசை பூசினால் விரைவில் பருக்கள் மறைந்துவிடும் என்று சிலர் பரிந்துரைப்பதிலும் உண்மை இல்லை.

 எலுமிச்சை:

எலுமிச்சை பழத்தை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட சரும பராமரிப்பு பொருட்கள் புழக்கத்தில் இருக்கின்றன. அதில் உள்ளடங்கி இருக்கும் சிட்ரிக் அமிலத்தின் அளவை கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் அதிக அளவு சிட்ரிக் அமிலம் கலந்திருந்தால் அது சிலருடைய சருமத்திற்கு ஒத்துக்கொள்ளாது. சருமத்தை சேதப்படுத்திவிடக்கூடும். சரும எரிச்சல், சரும வெடிப்பு போன்ற பாதிப்புகளையும் எதிர்கொள்ள நேரிடும். எலுமிச்சை சாறை நேரடியாக சருமத்தில் தடவுவதும் நல்லதல்ல.

 தேங்காய் எண்ணெய்:

தேங்காய் எண்ணெய் சருமத்திற்கு பொலிவு சேர்க்கும் என்ற கருத்து நிலவுகிறது. அதேவேளையில் முகத்திற்கு தேங்காய் எண்ணெய் உபயோகிப்பது கூடாது. உடலின் மற்ற பாகங்களில் பயன்படுத்திக்கொள்ளலாம். ஏனென்றால் தேங்காய் எண்ணெய்யில் உள்ளடங்கி இருக்கும் லாரிக் அமிலம் நிறைவுற்ற கொழுப்பாகும். அது சரும துளைகளை அடைத்து விடும். அதிலும் எண்ணெய் சருமம் கொண்டவர்கள் தேங்காய் எண்ணெய்யை உபயோகிக்கவே கூடாது. சரும துளைகளை அடைப்பதோடு முகப்பரு பிரச்சினையையும் ஏற்படுத்திவிடும்.

 ஷாம்பு:

கூந்தலுக்கு மட்டுமே ஷாம்புவை பயன்படுத்த வேண்டும். அது கூந்தலில் படிந்திருக்கும் அழுக்கு, எண்ணெய் பிசு பிசுப்பு போன்றவற்றை போக்க உதவும். அதற்காக ஷாம்புவை கொண்டு முகத்தை சுத்தம் செய்வது கூடாது. ஏனெனில் ஷாம்பு கூந்தலை சுத்தம் செய்வதற்காகவே தயாரிக்கப்படுபவை. அவை மென்மைத் தன்மையுடைய சரும செல்களை கையாள்வதற்கு ஏற்றவையல்ல. ஷாம்புவை கொண்டு முகத்தை கழுவினால் சருமம் உலர்வடைந்துவிடும்.

Tags:    

Similar News