சமையல்

செரிமானத்தை தூண்டும் நார்த்தை இலை துவையல்

Published On 2024-02-26 08:42 GMT   |   Update On 2024-02-26 08:42 GMT
  • எலுமிச்சை குடும்பத்தை சேர்ந்தது நார்த்தங்காய்.
  • நார்த்தங்காய் இலைகூட மருத்துவ சக்தி வாய்ந்தது.

ஆயுர்வேத மருத்துவ முறையில் அதிகம் பயன்படுத்தப்படும் முக்கியமான காய் வகை, எலுமிச்சை குடும்பத்தை சேர்ந்த நார்த்தங்காய். காய் மட்டுமல்ல, இதன் இலைகூட மருத்துவ சக்தி வாய்ந்தது. எலுமிச்சை வகையைச் சேர்ந்தது என்பதால், இதில் சிட்ரிக் அமிலம் அதிகம் இருக்கும். அதனால், வைட்டமின் சி சத்து நிறைந்து காணப்படும்.

`நார்த்தங்காய்' என்றவுடன், பலருக்கும் நினைவுக்கு வரும் ரெசிபி ஊறுகாய்தான். பல்வேறு நன்மைகளைக்கொண்டது என்ற போதிலும், ஊறுகாயை இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்தப் பிரச்னை இருப்பவர்கள் தவிர்க்க அறிவுறுத்தப்படுவதுண்டு. ஆனால், நார்த்தை இலைப் பொடிக்கு அப்படியான எந்த வரைமுறையும் கிடையாது. அனைவரும் சாப்பிடலாம்.

பயன்கள்:

* உடல் சூடு அதிகரிப்பதால் ஏற்படும் பித்தம், வாதம் போன்ற பிரச்னைகள் குணமாகும்.

* செரிமானப் பிரச்னைகள் ஏற்படாது.

* வயிறு தொடர்பான அனைத்து பிரச்னைகளுக்கும் சிறந்த மருந்து.

* குடல் பிரச்னைகள் சரியாகும்.

* இரும்புச்சத்து, சோடியம், கால்சியம், பீட்டா கரோட்டீன், மக்னீசியம், அயோடின், நார்ச்சத்துகள் நிறைந்தது என்பதால் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கான மிகச்சிறந்த மருந்து இது.

* நார்த்தையிலுள்ள செலினியம் சத்து, மூளையின் செயல்பாடுகளைத் தூண்டிவிடும். எனவே, சுறுசுறுப்பாகவும் புத்துணர்வுடனும் செயல்பட முடியும்.

* மிகச்சிறந்த ஆன்டிஆக்ஸிடன்டாக செயல்படும். எனவே, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

* வாந்தி உணர்வு கட்டுப்படும் என்பதால் கர்ப்பிணிகள் தாராளமாகச் சாப்பிடலாம்.

* அஜீரணத்தால் ஏற்படும் நெஞ்செரிச்சல் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்.

* ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள்வைத்திருக்க உதவும்.

தேவையான பொருட்கள்:

நரம்பு நீக்கிய, சுத்தமான இளம் நார்த்தை இலை- 20

காய்ந்த மிளகாய்- 4

தேங்காய்- ஒரு கப்

புளி- எலுமிச்சை அளவு

உப்பு- தேவையான அளவு

செய்முறை:

இளம் நார்த்தை இலைகளாக பார்த்து எடுத்துக்கொள்ள வேண்டும். முதலில் நார்த்தை இலைகளில் அதன் நார்பகுதி அதாவது இலைகளின் நடுவே உள்ள நார்பகுதியை கிள்ளி எடுத்துவிட்டு இலைகளை ஆய்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் காய்ந்த மிளகாயை மட்டும் வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

 அதன்பிறகு நார்த்தை இலை, புளி, காய்ந்த மிளகாய் மற்றும் தேங்காய், உப்பு சேர்த்து துவையல் பதத்திற்கு மிக்சி அல்லது அம்மியில் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அவ்வளவுதான் சுவையான நார்த்தை இலை துவையல் ரெடி. குறிப்பு: இதனை தாளித்தும் சாப்பிடலாம். உடலில் உள்ள பித்தத்தை குறைப்பதற்கு இந்த நார்த்தை இலை துவையல் மிகவும் நல்லது.

Tags:    

Similar News