பொது மருத்துவம்

சிறுநீரக கற்கள் பிரச்சினைக்கான சித்த மருத்துவ தீர்வு, உணவுமுறை

Published On 2024-02-28 07:04 GMT   |   Update On 2024-02-28 07:04 GMT
  • வைட்டமின் ஏ குறைபாடு சிறுநீரக கற்களை உருவாக்கும்.
  • சிறுநீரக கற்களுக்கு சித்த மருத்துவத்தில் சிறந்த சிகிச்சைகள் உள்ளன.

சிறுநீரகத்தில் கால்சியம் ஆக்சலேட், கால்சியம் பாஸ்பேட், யூரிக் அமிலம் சிஸ்டின், ஷேந்தீன் வகை கற்கள் உருவாகிறது. சிறுநீரக கற்களுக்கு சித்த மருத்துவத்தில் சிறந்த சிகிச்சைகள் உள்ளன. அவை வருமாறு:-

 1) சிறுகண் பீளை குடிநீர், நெருஞ்சில் குடிநீர், நீர்முள்ளி குடிநீர் இவைகளில் ஒன்றை ஒரு டீஸ் பூன் எடுத்து தண்ணீரில் கொதிக்க வைத்து 100 மி.லி. வீதம் காலை, மாலை என இரு வேளை குடிக்கவும்.

2) அமிர்தாதி சூரணம் 1 கிராம், நண்டுக்கல் பற்பம் 200 மி.கி., சிலாசத்து பற்பம் 200 மி.கி., வெடியுப்பு சுண்ணம் 100 மி.கி. வீதம் இருவேளை தண்ணீர் அல்லது இளநீரில் சாப்பிடலாம்.

3) கல்லுடைக்குடோரி - காலை, இரவு ஒரு மாத்திரை வீதம் சாப்பிட வேண்டும். கல்லுருக்கி இலை மற்றும் இரணகள்ளி இலை போன்றவற்றை தினமும் சாப்பிட்டு வர சிறுநீரக கல் குணமாகும். இதை இன்றைக்கும் கிராமங்களில் பயன்படுத்தி வருகின்றனர்.

சிறுநீரகக் கற்களை தடுக்கும் முறைகள்:

வைட்டமின் ஏ குறைபாடு சிறுநீரக கற்களை உருவாக்கும். ஆகவே, கேரட், பப்பாளி, முருங்கைக்காய் போன்றவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும். பொட்டாசியம் சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கிறது, கரைக்கிறது. எனவே பொட்டாசியம்

சத்து நிறைந்த இளநீர், பீன்ஸ், கொய்யா, வாழைப்பழம், தர்பூசணி போன்றவற்றை சாப்பிடலாம்.

சிட்ரிக் அமிலம் சிறுநீரக கல்லை கரைப்பதுடன் கல் உருவாவதையும் தடுக்கும். ஆகவே, எலுமிச்சைச்சாறு, சாத்துக்குடி, ஆரஞ்சு போன்றவைகளை உணவில் சேர்க்க வேண்டும்.

கால்சியம் அளவு குறைந்தால் அது ஆக்சலேட் உடன் இணைந்து கற்களை உருவாக்கும். ஆகவே, கால்சியம் நம் உடலில் சரியான அளவில் இருக்க வேண்டும்.

 இறைச்சி வகைகள், எலும்பு சூப், முட்டைக்கோஸ், காலிபிளவர், தக்காளி விதைகள், பீட்ருட், உப்பில் ஊறிய பொருட்கள் போன்றவற்றை உணவில் அடிக்கடி சேர்ப்பதை கட்டுப்படுத்த வேண்டும்.

நீர்ச்சத்து அதிகமுள்ள காய்கறிகளை தோல் நீக்கி சாறாக குடிக்கலாம். இதன் தோலில் அதிகளவு ஆக்சலேட் மற்றும் பாஸ்பேட்டுகள் உள்ள பருப்பு வகைகள், தோலை நீக்கி உணவில் சேர்க்க வேண்டும்.

வெண்பூசணி, வெள்ளரிக்காய், கோவைக்காய். முள்ளங்கிக்காய், கரைக்காய், பாகற்காய், வாழைத்தண்டு இவைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். சிறுநீரகக் கற்கள் உள்ளவர்கள் தினமும் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். சிறுநீரை அடக்காமல் அவ்வப்போது கழிக்க வேண்டும். உடல் வெப்பத்தை நீக்க, வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் எடுக்க வேண்டும்.

Tags:    

Similar News