குழந்தை பராமரிப்பு

ஹெச்3என்2 காய்ச்சலில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது எப்படி?

Published On 2023-10-06 09:47 GMT   |   Update On 2023-10-06 09:47 GMT
  • ஹெச்3என்2 காய்ச்சல் அதிகரித்து வருகிறது.
  • குழந்தைகளும், வயதானவர்களும் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்.

ஃப்ளூவின் அதிகபட்ச பாதிப்பை உண்டு செய்யும் ஹெச்3என்2 காய்ச்சல் அதிகரித்து வருகிறது. தற்போது குழந்தைகளும், வயதானவர்களும் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இவை சற்று தீவிரமான பாதிப்பையே உண்டு செய்கின்றன. இந்த காய்ச்சலை தவிர்க்க எதிர்கொள்ள என்ன செய்யலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

இன்ஃப்ளூயன்சா வைரஸ் என்பது ஒருவகை வைரஸ். நார்மலாக வரக்கூடிய சளி வகை போன்ற வைரஸ் தான் இது. எனினும் இதன் வீரியம் சற்று கூடுதலாக இருக்கும். இந்த ஹெச்3 என்2-ன் தாக்கம் இருந்தால் அதன் அறிகுறிகள் சளி, இருமல், மூக்கடைப்பு, மூச்சுத்திணறல், உடல் வலி, குமட்டல், வயிற்றுப்போக்கு, நீர் கோர்த்தல் இதனோடு அதிக காய்ச்சலும் இருக்கும்.

பொதுவாகவே வைரஸ் காய்ச்சல் 3- 4 நாட்கள் வரை இருக்கலாம். ஆனால் இந்த ஹெச்3 என்2 வைரஸ் ஒரு வாரம் முதல் ௧௨ நாட்கள் வரை கூட ஆகலாம். அதோடு சில நாட்கள் வறட்டு இருமல் நீடிக்கவும் வாய்ப்புண்டு. அதோடு தற்போது மழையும், வெயிலும் பருநிலை மாறுவதால் இதன் வீரியம் அதிகரிக்கும். இதனுடன் மிதமான மழையும் சேர்ந்தால் அது பரவலை அதிகரிக்கச் செய்யும்.

இதை எதிர்கொள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே தங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உணவியல் மற்றும் வாழ்வியல் முறைகளில் கவனம் செலுத்த வேண்டும்.

ஆரோக்கியமான உணவுகளில் எப்போதும் கவனம் செலுத்த வேண்டும். வீட்டில் தயாரிக்கும் உணவுகளை மட்டுமே எடுத்துகொள்ள வேண்டும். சாலையோர கடைகளில் இருக்கும் உணவுகள், சுகாதாரமற்ற உணவுகளை தவிர்ப்பதே பாதுகாப்பானது. உதாரணத்துக்கு சாலையோரம் கம்பங்கூழ், கேப்பை கூழ், திறந்த நிலையில் இருக்கும் வெங்காயம், மோர் மிளகாய், வத்தல் போன்றவை வெயிலுக்கு இதமாக இருக்கும் என்றாலும் இவை நீண்ட நேரம் திறந்த நிலையில் இருப்பதால் இவற்றில் இருக்கும் கிருமித்தொற்றுகள் உடலில் பாதிப்பை உண்டு செய்யலாம்.

வெயிலுக்கு ஏற்றது என்றாலும் கபத்தை உண்டு செய்யும் கொய்யாப்பழம், பால் சேர்ந்த பொருள்கள் குறைப்பது நல்லது. இதனோடு இரவு நேரங்களில் போதுமான தூக்கம் அவசியம் ஆகும்.

குழந்தைகளுக்கு ஹெச்3 என்2 மட்டும் அல்லாமல் மற்ற தொற்றுகளையும் எதிர்க்கும் அளவுக்கு உடல் பலமாக இருக்க தினமும் பூண்டு பால் கொடுக்கலாம். குழந்தைக்கு சளி தொற்று இருக்கும் போது, காய்ச்சல் இருக்கும்போது நீங்கள் தொடர்ந்து 10 நாட்கள் இந்த பூண்டு பால் கொடுக்கலாம். குழந்தைக்கு தொற்று நேராமல் தடுக்க உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வாரம் இரண்டு அல்லது மூன்று முறை இதை கொடுக்கலாம்.

பூண்டு- ஒரு பல் எடுத்து தட்டிகொள்ளவும். அதில் பால் மற்றும் தண்ணீர் சம அளவு சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். பூண்டு வேகும் வரை வைத்து பிறகு ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், ஒரு சிட்டிகை மிளகுத்தூள் சேர்த்து இனிப்பு தேவை என்றால் நாட்டுச்சர்க்கரை அல்லது தேன் கலந்து கொடுக்கலாம். தொற்று வந்த பிறகு தொடர்ந்து 10 நாட்கள் வரை இதை கொடுக்கலாம்.

நுரையீரல் தொற்று பிரச்சனை உள்ள குழந்தைகளுக்கு தினமும் கொடுக்கலாம். நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய், நுரையீரல் தொடர்பான கோளாறுகள், உடல் பருமன் கொண்டவர்களுக்கு தொற்று நேரும் அபாயம் அதிகமாக இருக்கலாம். இவர்கள் இன்னும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வாரத்தில் இரண்டு நாட்கள் நிலவேம்பு கஷாயமும், கபசுர குடிநீரும் எடுத்துவந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தொற்று நேர்ந்தாலும் அவை தீவிரமாகாமல் தடுக்க முடியும்.

குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு அதிகம் இருப்பதை பார்க்க முடிகிறது. காற்றில் கூட இந்த வைரஸ் தொற்று பரவ வாய்ப்பு அதிகம் என்பதால் இன்னும் கவனம் செலுத்த வேண்டும். கிருமிநாசினிகள் பயன்படுத்துவதன் மூலம் வைரஸ் தொற்று வராமல் தடுக்க முடியும்.

கூட்டமான இடங்கள் என்றில்லாமல் எப்போதும் ஒரு சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதன் மூலம் இந்த ஹெச்3என்2 தொற்று மட்டுமல்ல வேறு எந்த வகை தொற்றையும் தடுக்கலாம்.

Tags:    

Similar News