கோவில்கள்

கோதண்டராமர், சீதாதேவியுடன் திருக்கல்யாண கோலத்தில் காட்சி தரும் திருக்கோவில்

Published On 2023-07-13 06:23 GMT   |   Update On 2023-07-13 06:23 GMT
  • கோவிலுக்கு அருகே சரயுபுஷ்கரணி உள்ளது.
  • அவரது வடிவழகை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.

தமிழ்நாட்டில் உள்ள ராமர் கோவில்களில், வடுவூர் கோதண்டராம சுவாமி கோவில் பிரசித்திப்பெற்றது. தட்சிண அயோத்தி என அழைக்கப்படும் இத்திருத்தலத்தில் மூலவராக கோதண்டராமர், சீதாதேவியுடன் திருக்கல்யாண கோலத்தில் எழுந்தருளியுள்ளார். அவரது வடிவழகை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.

'மையோ! மரகதமோ! மழை முகிலோ, அலை கடலோ! ஐயோ இவன் வடிவு என்பதோர் அழியா அழகுடையோன் என்றும் கண்டோம், கண்டோம், கண்டோம், கண்ணுக்கினியானை கண்டோம்' என்று அனுபவிக்கும் படியாய், ஸ்ரீ கோதண்டராமர் சீதாப்பிராட்டி, லட்சுமணன், அனுமனுடன் திவ்யதரிசனம் தருகிறார். ஸ்ரீ ராமநவமி விழா 10 நாட்கள் பிரமோற்சவத்துடன் விமரிசையாக கொண்டாடப்படும். அப்போது நடைபெறும் திருக்கல்யாண உற்சவத்தை பார்ப்பவர்களுக்கு திருமணம் விரைவில் நடைபெறும் என்பது நம்பிக்கை.

தல வரலாறு : இதிகாச நாயகனான ராமன், தந்தை தசரதனின் ஆணையின்படி 14 ஆண்டுகள் வனவாசம் மேற்கொண்டார். அடர்ந்த கானகத்தில் அவர் நடமாடி வந்தபோது, அங்குள்ள முனிவர்கள் அவரை அங்கேயே தங்கி இருக்கவேண்டும் என்று மன்றாடி கேட்டுக்கொண்டனர். அவதார நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டு ராமன் முனிவர்களை சமாதானப்படுத்தி மேற்கொண்டு செல்ல தடைவிதிக்கக்கூடாது என்று கூறினார். அதற்கு முனிவர்கள் சம்மதிக்கவில்லை. இதனால் ராமன் என்ன செய்வதென்று சிந்தித்தார். முடிவில் தன் கையாலேயே தன்வடிவத்தைத்தானே விக்ரகமாக செய்து தனது ஆசிரமத்து வாசலில் வைத்துவிட்டு உள்ளே சீதையுடன் இருந்தார்.

முனிவர்கள் மறுமுறை ராமனை தரிசிக்க வந்தபோது, ஆசிரமத்து வாசலில் அழகெல்லாம் ஓர் உருவாய் திரண்ட வடிவழகுடன் கூடிய ராமன் செய்த விக்ரகத்தை வணங்கி விட்டு உள்ளே சென்றார்கள். அப்போது அவர்கள் ராமனிடம் இந்த தண்ட காரண்யத்தை விட்டு செல்லக்கூடாது என்று மீண்டும் வேண்டிக்கொண்டனர். அப்போது ராமன் நான் வேண்டுமா? அல்லது ஆசிரமத்து வாசலில் உள்ள எனது அர்ச்சை உருவம் வேண்டுமா? என்று கேட்டார். ராமனின் விக்ரகத்தின் அழகில் மெய் மறந்து இருந்த முனிவர்கள் அந்த திவ்ய விக்ரகத்தையே விரும்பினார்கள். உடனே விக்ரகத்தை முனிவர்களிடம் கொடுத்த ராமன் அங்கே எழுந்தருளிவிட்டார்.

அந்த விக்ரகத்தை திருக்கண்ணப்புரத்தில் ராமர் சன்னிதியில் பிரதிஷ்டை செய்து நீண்டகாலம் வழிபட்டு வந்திருக்கிறார்கள். அதனால்தான் திருக்கண்ணப்புரம் பெருமாளை பாடிய குலசேகர ஆழ்வார், இந்த ராமனை மனதில் கொண்டு, தனது பெருமாள் திருமொழியில் 'மன்னுபுகழ் என்ற எட்டாம் திருமொழியில், சிலை வளைத்தாய், சிலைவலவர், ஏமருவுஞ்சிலை வலவா, வளையவொரு சிலை அதனால், ஏவரி வெஞ்சலை வலவா' என பாடியுள்ளார்.

ஸ்ரீ சவுரி ராஜனாகிய கண்ணபிரான் எழுந்தருளியிருக்கும் திருக்கோவிலில் கிளைச்சன்னிதியில் ராமன் இருந்ததால் இப்பதிகத்தை அவர்பாடினார். இந்த ராமர் விக்ரகம் ஒரு காலத்தில் அங்கிருந்து அகற்றப்பட்டு திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டிக்கு அருகிலுள்ள தலைஞாயிறு என்ற ஊரில் மரத்தடியில், சீதை, லட்சுமணன், பரதன், அனுமன் விக்ரகங்களுடன் மண்ணுக்கடியில் மறைத்து வைக்கப்பட்டது.

பல ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சையை ஆண்டு வந்த மராட்டிய மன்னரின் கனவில், பெருமாள் சென்று தான் தலைஞாயிறு அருகே மண்ணுக்கடியில் புதையுண்டு கிடப்பதாகவும், அதை வெளியில் எடுத்து கோவில்கட்டி, ஆராதனை செய்யும்படியும் உத்தரவிட்டார். அதன்படியே மன்னரும் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று விக்ரகங்களை மண்ணில் இருந்து வெளியே எடுத்தார்.

அப்போது அந்த ஊர் மக்கள் திரண்டு வந்து, சிலைகளை அங்கிருந்து எடுத்துச்செல்ல கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே லட்சுமணன், பரதன், சிலைகளை மன்னர் அவர்களிடம் கொடுத்து அவர்களை சமாதானப்படுத்தி, ஸ்ரீ கோதண்டராமர், சீதை, அனுமன் சிலைகளை பல்லக்கில் எடுத்துக்கொண்டு வந்தார். அந்த சிலைகளை தஞ்சையில் பிரதிஷ்டை செய்ய எண்ணி கொண்டு வரும் வழியில் வடுவூர் வந்தபோது நள்ளிரவு ஆகிவிட்டது. அங்கு தங்கி இளைப்பாறி, விக்ரகங்களை வடுவூர் கோவிலில் வைத்து இருந்தார்.

இந்த எழிலார்ந்த விக்ரகங்களை கண்ட அவ்வூர் மக்கள் அவற்றை வடுவூரிலேயே பிரதிஷ்டை செய்யவேண்டும் என்று மன்னரிடம் கேட்டுக்கொண்டனர். விக்ரகங்களை மன்னர் மீறி எடுத்து சென்றால், தாங்கள் அனைவரும் உயிரை மாய்த்து கொள்வதாக கூறினர். உடனே மன்னனும் மனமுவந்து அந்த விக்ரகங்களை அங்கேயே பிரதிஷ்டை செய்தார். பின்னர் லட்சுமணன் விக்ரகத்தையும் புதிதாக செய்தனர்.

சரயுபுஷ்கரணி :

தஞ்சாவூரில் இருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் 20 கிலோ மீட்டர் தூரத்தில் பறவைகள் சரணாலயமான வடுவூர் ஏரிக்கரையில் கோவில் அமைந்துள்ளது. கோவிலுக்கு அருகே சரயுபுஷ்கரணி உள்ளது. கிழக்கு பார்த்த கோவிலின் முகப்பில் 61 அடி உயரமுள்ளதும், 5 அடுக்குகளும் கொண்ட ராஜகோபுரம் உள்ளது.

கோவிலில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் தை மாதம் வெள்ளிக்கிழமைகளில் தாயார் எழுந்தருளி சேவை தருவது வழக்கம். ஆடிப்பூரம், கனுப்பண்டிகை நாட்களில் தாயார் ஊஞ்சல் உற்சவம் இங்கு நடக்கும். இந்த மண்டபத்தின் தெற்கில் உள்ள சன்னிதியில் லட்சுமி, ஹயக்கிரீவர் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளியுள்ளனர். பிரபையில் காளிங்கநர்த்தன கண்ணபிரான் உபய நாச்சியாருடன் விளங்குகிறார். பெருமாள் சன்னிதிக்கு நேர் எதிரில் கண்ணாடி அறையும் பெரிய திருவடி (கருட) சன்னிதியும் மேற்கு நோக்கி உள்ளன.

மகாமண்டபத்தின் வடக்குப்பக்கம் சுவரையொட்டி வரிசையாக மூலவர்களாக விக்னேசுவரர், ஆதிசேஷன், ஆண்டாள், உடையவர் முதலியன ஆழ்வார்கள் உள்ளனர். இதையொட்டியுள்ள தெற்கு நோக்கிய சன்னிதிக்குள் வாசுதேவன், ஸ்ரீதேவி, பூதேவி, செங்கமலத்தாயாருடன் மூலவராகவும், ஸ்ரீ கோபாலன் ருக்மணி சத்யபாமாவுடன், உற்சவராகவும் காட்சி தருகிறார். அர்த்த மண்டபத்தில் வடகிழக்கு மூலையில் பெரிய நிலைக்கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது.

அந்த கண்ணாடியினுள்ளே கோதண்டராமரின் பிரதிபிம்ப சேவை கிடைக்கும். ஆலய தல விருட்சம் வகுள மரம் ஆகும். இந்த ஆலயத்தில் தினமும் 6 கால பூஜைகள் நடைபெறுகின்றன. சித்திரை மாதம் அட்சயதிரிதியை, ஆடிமாதம் ஆற்றங்கரையில் தீர்த்தவாரி, புரட்டாசியில் தேசிகன் உற்சவம், நவராத்திரி, வைகுண்ட ஏகாதசி, தை அமாவாசை தீர்த்தவாரி, மாசிமகம், பங்குனி மாதம் ஸ்ரீ ராமநவமியையொட்டி புனர்பூச நட்சத்திரத்தில் தொடங்கி 10 நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும்.

அமைவிடம் : வடுவூர் ஸ்ரீ கோதண்டராம சுவாமி கோவில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து 13 கிலோ மீட்டர் தூரத்திலும், தஞ்சையில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரத்திலும் உள்ளது. தஞ்சாவூரில் இருந்து மன்னார்குடி செல்லும் பஸ்சில் சென்றால் 40 நிமிட பயண தூரத்தில் வடுவூரை அடையலாம்.

Tags:    

Similar News