கோவில்கள்

மேரு மலை வடிவில் ஓர் ஆலயம்

Published On 2023-07-13 09:14 GMT   |   Update On 2023-07-13 09:14 GMT
  • இந்த ஆலயம் சிவபெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
  • மேரு மலையின் அமைப்பில் கட்டப்பட்டுள்ள இந்த ஆலயத்தின் கோபுரம் 31 மீட்டர் உயரம் கொண்டது.

மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ளது, கஜூராஹோ என்ற பகுதி. இந்தப் பகுதியானது, கி.பி. 500 முதல் கி.பி. 1300 வரை வட இந்தியாவின் குறுநில மன்னர்களாக இருந்த சந்தேல அரசர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. அப்போது கி.பி.950 முதல் கி.பி.1150-க்கு உட்பட்ட 200 ஆண்டு காலத்திற்குள், கஜூராஹோ நினைவுச்சின்னங்கள் கட்டமைக்கப்பட்டதாக வரலாற்றுப் பதிவு சொல்கிறது.

இங்கு இந்து மற்றும் சமணம் சார்ந்த கோவில்கள் பல இருக்கின்றன. இங்குள்ள சிற்றின்பம் சார்ந்த சிற்பங்கள் உலகப் புகழ்பெற்றவை. கஜூராஹோ பகுதியில் உள்ள நினைவுச்சின்னங்கள் அனைத்தும் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இங்கு அமைந்த கோவில்களில் ஒன்றுதான் கந்தாரிய மகாதேவர் ஆலயம்.

இதனை சந்தேல மன்னர்களில் ஒருவரான வித்தியாதரன் என்பவர், தன்னுடைய ஆட்சி காலத்தில் (1003-1035) கட்டியிருக்கிறார். கஜூராஹோ மேற்கு பகுதி நினைவுச்சின்ன தொகுப்பில் உள்ள கோவில்களில், இதுவே மிகப்பெரியது. இந்த ஆலயம் சிவபெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மேரு மலையின் அமைப்பில் கட்டப்பட்டுள்ள இந்த ஆலயத்தின் கோபுரம் 31 மீட்டர் உயரம் கொண்டது.

இந்தக் கோவில் கோபுரமானது, 84 சுருள் வடிவிலான விமானங் களைக் கொண்டிருக்கிறது. இந்தக் கோவிலின் மொத்த நீளம் 102 அடி, அகலம் 67 அடி, உயரம் 102 அடியாகும். இங்கு அருள்பாலிக்கும் மூலவரான கந்தாரிய மகாதேவர் வீற்றிருக்கும் கர்ப்பக்கிரக மேடையானது, 4 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இந்த ஆலயம், குகை போன்று சிறிய வாசலைக் கொண்டிருக்கிறது. எனவே சூரிய ஒளி புகும் வகையில், கோவில் சுவர்களில் சாளரங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

Tags:    

Similar News