இஸ்லாம்
இஸ்லாம்

இறைவனுக்கு விருப்பமான செயல் எது?

Published On 2022-02-01 04:09 GMT   |   Update On 2022-02-01 04:09 GMT
அடுத்தவரின் உணவை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நாம், தமக்கு போக மீதமுள்ளதை தானமாக வழங்கிட வேண்டும். வீண் விரயம் செய்யக்கூடாது.

காற்று, நீர், நெருப்பு, நிலம், வானம் ஆகிய ஐந்து அம்சங்களால் உருவாக்கப்பட்டது தான் உலகமும், உலக உயிரினங்களும். இந்த ஐந்து நிலைகளில் ஒன்றை இழந்தாலும் உயிர் வாழ முடியாது; உலகமும் இயங்காது.

நிலம் என்பது வெறும் மண்ணை மட்டுமே குறிக்காது. மண்ணில் விளையும் அனைத்து வகையான உணவு வகைகளையும் உள்ளடக்கும். சுருக்கமாகச் சொல்வதென்றால் உணவின்றி உயிர் வாழமுடியாது. மனிதன் உயிர் வாழ உணவு தேவை.

ஒருவருக்கு போதுமான அளவை விட அதிகப்படியான உணவு பண்டங்கள் யாவுமே அடுத்தவரின் உணவே, அவரின் உடமையே, அவரின் உரிமையே. அடுத்தவரின் உணவை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நாம், தமக்கு போக மீதமுள்ளதை தானமாக வழங்கிட வேண்டும். வீண் விரயம் செய்யக்கூடாது.

தானத்தில் சிறந்தது அன்னதானம். அன்னதானத்தை வலியுறுத்தி இஸ்லாம் அதிகமாக பேசுகிறது. இஸ்லாத்தில் சிறந்த செயல் பசித்தவருக்கு உணவளிப்பது. செயல்களில் இறைவனுக்கு மிகவும் பிடித்த விருப்பமான செயல், பசித்தவனுக்கு உணவளிப்பது. சொர்க்கத்தின் வாசலை திறந்து வைக்கும் செயல், பசித்தவனுக்கு உணவளிப்பது. மக்களில் சிறந்தவர் பசித்தவனின் பசியை போக்குபவர் ஆவார். பசித்தவனின் பசியை போக்கும் பண்பு நல்லோர்களின் பண்பு. பசியை போக்கும் நற்பண்பு வலப்புறத்தாராகிய சொர்க்கவாசிகளின் இயற்கையான பண்பு.

“ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் ‘இஸ்லாமியப் பண்புகளில் சிறந்தது எது?’ என்று கேட்டார். ‘பசித்தவருக்கு நீர் உணவளிப்பதும், நீர் அறிந்தவருக்கும், அறியாதவருக்கும் ஸலாம் எனும் வாழ்த்துக் கூறுவதும் ஆகும்’ என்று நபி (ஸல்) பதில் கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி), நூல்: புகாரி)

‘செயல்களில் இறைவனுக்கு மிகவும் விருப்பமானது, ஒருவர் மகிழ்ச்சியை தமது சகோதர முஸ்லிமுக்கு சேர்த்து வைப்பதும், அவரை விட்டு சிரமங்களை அகற்றுவதும், அவரின் பசியை போக்குவதும், அவரின் கடனை நிறைவேற்றுவதும் ஆகும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), நூல்: தப்ரானீ)

“ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘அல்லாஹ்வின் தூதரே, என்னை சொர்க்கத்தில் சேர்த்து வைக்கும் ஒரு செயலை எனக்குக் கற்றுத் தாருங்கள்’ என வேண்டினார். அப்போது, நபி (ஸல்) அவர்கள் ‘நீர் ஓர் அடிமையை விடுதலை செய்வீராக, அதற்கு சக்தி பெறாத பட்சத்தில் பசித்தவருக்கு உணவளிப்பீராக, தாகித்தவனுக்கு நீர் புகட்டுவாயாக’ என பதில் கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: பராஉ பின் ஆஸிப் (ரலி), நூல்: அஹ்மது)

‘ஒரு பேரீத்தம் பழத்தின் சிறு துண்டையேனும் தர்மம் செய்து நரகத்திலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள், என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அதீ பின் ஹாத்திம் (ரலி), நூல்: புகாரி)

‘உங்களில் சிறந்தவர் பசித்தவருக்கு உணவு அளிப்பவரே ஆவார் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: சுஹைப் (ரலி), நூல்: அஹ்மது)

‘நிச்சயமாக நல்லோர்கள் இறைவன் மீதுள்ள பிரியத்தினால் ஏழைகளுக்கும், அனாதைகளுக்கும், சிறைப்பட்டோருக்கும் உணவளிப்பார்கள். உங்களுக்கு நாங்கள் உணவளிப்பதெல்லாம், அல்லாஹ்வின் முகத்திற்காக வேண்டியே. உங்களிடமிருந்து பிரதிபலனையோ, நீங்கள் நன்றி செலுத்த வேண்டியோ நாங்கள் நாடவில்லை’ என்று கூறுவார்கள். (திருக்குர்ஆன் 76: 8,9)

‘அவன் கணவாயைக் கடக்கவில்லை. கணவாய் என்பது என்னவென்பது உமக்கு எப்படித் தெரியும்? அடிமையை விடுதலை செய்தல், அல்லது நெருங்கிய உறவுடைய அனாதைக்கும், அல்லது வறுமையில் உழலும் ஏழைக்கும் பட்டினி காலத்தில் உணவளித்தல், பின்னர் நம்பிக்கை கொண்டு பொறுமையைப் போதித்து, இரக்கத்தையும் போதித்தோரில் இணைதல் இவைகளே கணவாய் ஆகும். அவர்களே வலப்புறத்தார்’. (திருக்குர்ஆன் 90:11-18)

‘தம் அண்டைவீட்டார் பசித்திருக்க தாம் மட்டும் வயிறு நிரம்ப சாப்பிடுபவன் உண்மை இறைவிசுவாசியாக ஆகமாட்டான் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: ஹாகிம்)

பசித்திருக்கும் அண்டை வீட்டாரின் பசியையும் போக்கி, குடும்பத்தினரால் கைவிடப்பட்டு நாடோடிகளாக ரோட்டில் சுற்றித்திரியும், வீதிகளை வீடுகளாக நினைத்து தெருவீதிகளிலும், கடை வீதிகளிலும், நடைபாதைகளிலும், கடைகோடியிலும் இருப்பிடம் அமைத்து அல்லல்படும் அப்பாவிகளின் பசியையும் போக்க வேண்டும். யாசிப்பவருக்கும், யாசிக்காமல் சுயமரியாதையாக வாழும் கஷ்டப்படுவோருக்கும் உணவளித்து, அவர்களின் பசியை போக்கிட வேண்டும். பசித்தவனின் பசியை போக்கி பசியில்லாத, பட்டினிச்சாவு இல்லாத உலகை கட்டமைப்போம்.

அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.
Tags:    

Similar News