கார்

நெக்சான் EV மாடலுக்கு ரூ. 2.60 லட்சம் வரை தள்ளுபடி.. டாடா மோட்டார்ஸ் அதிரடி

Published On 2023-12-15 09:55 GMT   |   Update On 2023-12-15 09:55 GMT
  • இந்த பலன்கள் ஒவ்வொரு விற்பனையாளரை பொருத்து வேறுபடும்.
  • இந்த கார் மணிக்கு 100 கி.மீ. வேகத்தை 9 நொடிகளில் எட்டிவிடும்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்சான் EV பிரைம் மற்றும் நெக்சான் EV மேக்ஸ் மாடல்களுக்கு தள்ளுபடி அறிவித்து இருக்கிறது. நெக்சான் EV ஃபேஸ்லிஃப்ட் மாடல் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், அதற்கு முந்தைய வெர்ஷன் இன்னும் முழுமையாக விற்றுத்தீரவில்லை என்று தெரிகிறது. அந்த வகையில், இரு மாடல்களுக்கு அதிகபட்சம் ரூ. 2 லட்சத்து 60 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன.

இவை தள்ளுபடி மற்றும் எக்சேன்ஜ் சலுகைகள் வடிவில் வழங்கப்படுகின்றன. இந்த சலுகைகள் டிசம்பர் 31-ம் தேதி அல்லது ஸ்டாக் இருக்கும் வரை வழங்கப்படுகிறது. மேலும் இந்த பலன்கள் ஒவ்வொரு விற்பனையாளரை பொருத்து வேறுபடும்.

இந்திய சந்தையில் டாடா நெக்சான் EV பிரைம் மாடலின் விலை ரூ. 14 லட்சத்து 49 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 17.5 லட்சம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இந்த மாடல் ரூ. 1 லட்சத்து 40 ஆயிரம் தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படும்.

 


இந்தியாவில் டாடா நெக்சான் EV மேக்ஸ் மாடலின் விலை ரூ. 16 லட்சத்து 49 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 20 லட்சத்து 04 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இந்த மாடல் தற்போது ரூ. 2 லட்சத்து 10 ஆயிரம் தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படுகிறது. இரு மாடல்களுடன் அதிகபட்சம் ரூ. 50 ஆயிரம் வரையிலான எக்சேன்ஜ் பலன்கள் வழங்கப்படுகின்றன.

டாடா நெக்சான் EV மேக்ஸ் மாடலில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார் 141 ஹெச்.பி. திறன் வெளிப்படுத்துகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 9 நொடிகளில் எட்டிவிடும். இத்துடன் 40.5 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்படுகிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 437 கிலோமீட்டர்கள் வரை செல்லும்.

நெக்சான் EV பிரைம் மாடலில் உள்ள மோட்டார் 127 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்துகிறது. இதில் உள்ள 30.2 கிலோவாட் ஹவர் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 312 கிலோமீட்டர்கள் வரை பயணிக்க முடியும்.

Tags:    

Similar News