search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்திரேலியா-இங்கிலாந்து மோதும் ஆஷஸ் டெஸ்ட் நாளை தொடக்கம்
    X

    ஆஸ்திரேலியா-இங்கிலாந்து மோதும் ஆஷஸ் டெஸ்ட் நாளை தொடக்கம்

    ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நாளை தொடங்குகிறது.
    பிரிஸ்பேன்:

    ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதலாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

    ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் இடையே நூறு ஆண்டுகளுக்கு மேலாக நடக்கும் பாரம்பரியமிக்க ஒரு தொடராகும். ஆஷஸ் கவுரவத்துக்காக எதையும் இழக்கத் தயார் என்கிற ரீதியில் இரு அணிகளும் களத்தில் ஆக்ரோஷமாக மல்லுகட்டி நிற்பார்கள். இதனால் இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் அமோக வரவேற்பு உண்டு. 4 ஆண்டுகள் இடைவெளிக்குள் தலா ஒரு முறை இவ்விரு நாடுகளிலும் ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடக்கும். கடைசியாக 2015-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த தொடரில் இங்கிலாந்து அணி 3-2 கணக்கில் வென்று இருந்தது.

    இந்த முறை சொந்த மண்ணில் கால்பதிக்கும் ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்தை நையபுடைக்கும் உத்வேகத்துடன் காத்திருக்கிறது. காயத்தில் இருந்து மீண்ட மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட் அணிக்கு திரும்பியிருப்பது ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சை வலுப்படுத்தியுள்ளது.

    நேற்றைய பீல்டிங் பயிற்சியின் போது துணை கேப்டன் டேவிட் வார்னர் கழுத்தில் காயம் அடைந்தார். கழுத்தில் ஏற்பட்டுள்ள பிடிப்புக்கு சிகிச்சை பெறுவதாகவும், முதலாவது டெஸ்ட் போட்டிக்குள் முழு உடல்தகுதியை பெற்று விடுவேன் என்று நம்புவதாகவும் வார்னர் குறிப்பிட்டார்.



    தொடக்க ஆட்டக்காரரான வார்னருடன் அறிமுக வீரர் கேமரூன் பான்கிராப்ட் களம் இறங்குகிறார். பேட்டிங், பந்துவீச்சில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவுக்கு உள்ளூரில் விளையாடுவது சாதகமான அம்சமாகும்.

    இங்கிலாந்து அணியை பொறுத்தவரை ஆஷஸ் கோப்பையை தக்கவைக்க தீவிர முனைப்பு காட்டுகிறது. கடந்த 5 ஆஷஸ் தொடர்களில் 4-ல் இங்கிலாந்து தான் மகுடம் சூடியது. ஆனால் இந்த முறை அவர்களின் ஆதிக்கம் நீடிக்குமா என்பதை உறுதியாக சொல்ல முடியாது.

    அந்த அணிக்கு ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஆணிவேராக விளங்கினார். பந்து வீச்சு, பேட்டிங் இரண்டிலும் மிரட்டக்கூடியவர். இரவு விடுதியில் குடித்து விட்டு வாலிபரை தாக்கிய வழக்கில் அவர் மீது விசாரணை நடந்து வருகிறது. இதனால் அவர் அணியில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்பட்டு விட்டார். அவர் இல்லாதது இங்கிலாந்துக்கு நிச்சயம் பின்னடைவாகும். ஆனால் ஸ்டோக்ஸ் இல்லாவிட்டாலும் எங்களால் சாதிக்க முடியும் என்று இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் கூறியிருக்கிறார்.

    ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித், இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் இருவரும் முதல் முறையாக ஆஷஸ் அணியை வழிநடத்துகிறார்கள். இதில் யாருடைய கை ஓங்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.



    பிரிஸ்பேன், ஆஸ்திரேலியாவுக்கு ராசியான மைதானமாகும். இங்கு 1988-ம் ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணியை யாரும் வீழ்த்தியது கிடையாது. கடந்த 29 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா இங்கு விளையாடியுள்ள 28 டெஸ்டுகளில் 21-ல் வெற்றியும், 7-ல் டிராவும் கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    போட்டிக்கான இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:-

    ஆஸ்திரேலியா: ஸ்டீவன் சுமித் (கேப்டன்), வார்னர், கேமரூன் பான்கிராப்ட், ஜாக்சன் பேர்டு, பேட் கம்மின்ஸ், ஹேன்ட்ஸ்கோம்ப், ஹேசில்வுட், உஸ்மான் கவாஜா, நாதன் லயன், ஷான் மார்ஷ், டிம் பெய்ன், சாட் சயேர்ஸ், மிட்செல் ஸ்டார்க்.

    இங்கிலாந்து: ஜோ ரூட் (கேப்டன்), மொயீன் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், பேர்ஸ்டோ, ஜாக்பால், கேரி பேலன்ஸ், ஸ்டூவர்ட் பிராட், அலஸ்டயர் குக், மாசோன் கிரேன், பென் போக்ஸ், ஜார்ஜ் கார்டன், டேவிட் மலான், கிரேக் ஓவர்டான், மார்க் ஸ்டோன்மான், ஜேம்ஸ் வின்சி, கிறிஸ் வோக்ஸ்.

    இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
    Next Story
    ×