search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.பி.எல். கிரிக்கெட்: நெருக்கடிக்கு மத்தியில் கொல்கத்தாவை சந்திக்கும் பஞ்சாப் அணி
    X

    ஐ.பி.எல். கிரிக்கெட்: நெருக்கடிக்கு மத்தியில் கொல்கத்தாவை சந்திக்கும் பஞ்சாப் அணி

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் 6 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் இருக்கும் பஞ்சாப் அணி, 4 தோல்வியுடன் புள்ளிபட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் கொல்கத்தா அணியுடன் மோதுகிறது.
    பஞ்சாப் அணி இதுவரை 11 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 6 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் இருக்கிறது. தொடர்ந்து 2 லீக் ஆட்டங்களில் வெற்றி பெற்று அடுத்த சுற்று வாய்ப்பை நோக்கி பயணித்த பஞ்சாப் அணி கடைசி லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்திடம் தோல்வி கண்டது. அந்த ஆட்டத்தில் 189 ரன்கள் குவித்தும் வெற்றியை எட்ட முடியாமல் போனது பஞ்சாப் அணியின் அடுத்த சுற்று வாய்ப்பை சந்தேகத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது. எஞ்சிய 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்று வாய்ப்பை எட்ட முடியும் என்ற நெருக்கடியான நிலையில் பஞ்சாப் அணி இருக்கிறது.

    கொல்கத்தா அணி 12 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி, 4 தோல்வியுடன் புள்ளிபட்டியலில் 2-வது இடத்தில் இருப்பதுடன், ஏறக்குறைய அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்து விட்டது. தொடர்ச்சியாக 2 தோல்வியை சந்தித்த கொல்கத்தா அணி கடைசி லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவை எளிதில் தோற்கடித்து விசுவரூபம் எடுத்து இருக்கிறது.



    அந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணி பவர் பிளேயில் (முதல் 6 ஓவரில்) 105 ரன்கள் திரட்டி புதிய சரித்திரம் படைத்தது. சுனில் நரின் 15 பந்துகளில் அரை சதம் கண்டு ஐ.பி.எல். போட்டியில் அதிவேக அரைசத சாதனையை யூசுப் பதானுடன் இணைந்து படைத்தார். அதிரடியாக அரை சதம் அடித்து கிறிஸ் லின்னும் அசத்தினார். முந்தைய ஆட்டத்தில் பெற்ற சிறப்பான வெற்றி உத்வேகத்துடன் கொல்கத்தா அணி களம் காணும்.

    புள்ளி பட்டியலில் மேலும் ஏற்றம் காண கொல்கத்தா அணி தனது அதிரடி ஆட்டத்தை அரங்கேற்ற முயலும். அதேநேரத்தில் அடுத்த சுற்று வாய்ப்புக்காக பஞ்சாப் அணி எல்லா வகையிலும் கடுமையாக போராடும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. முந்தைய லீக் ஆட்டத்தில் தனது சொந்த மண்ணில் கொல்கத்தா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை பஞ்சர் செய்து இருந்தது என்பது நினைவிருக்கலாம்.
    Next Story
    ×