search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.பி.எல். போட்டி: கொல்கத்தா அதிரடியை ஐதராபாத் இன்று சமாளிக்குமா?
    X

    ஐ.பி.எல். போட்டி: கொல்கத்தா அதிரடியை ஐதராபாத் இன்று சமாளிக்குமா?

    ஐ.பி.எல். போட்டியில் இன்றைய ஆட்டத்தில் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
    மொகாலி:

    ஐ.பி.எல். போட்டியில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடக்கிறது.

    மாலை 4 மணிக்கு மொகாலியில் நடைபெறும் ஆட்டத்தில் மேக்ஸ்வெல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப்- ஜாகீர்கான் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன.

    பஞ்சாப் அணி 3 வெற்றி, 5 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி முதலில் 2 ஆட்டத்தில் வெற்றி பெற்றது. பின்னர் தொடர்ச்சியான 4 ஆட்டங்களில் தோற்றது. குஜராத்தை வீழ்த்தி தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது. கடந்த ஆட்டத்தில் ஐதராபாத்திடம் தோற்று இருந்தது.

    பஞ்சாப் அணி ஏற்கனவே டெல்லியிடம் 51 ரன்னில் தோல்வி அடைந்து இருந்தது. அதற்கு இன்றைய ஆட்டத்தில் பதிலடி கொடுத்து 4-வது வெற்றியை பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    டெல்லி அணி 2 வெற்றி, 5 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் இருக்கிறது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் பெங்களூரிடம் தோற்றது. அதன்பிறகு புனே, பஞ்சாப்பை வீழ்த்தியது. அடுத்து 4 ஆட்டங்களில் தொடர்ந்து தோற்றது.

    தோல்விக்கு முற்றுப் புள்ளி வைத்து 3-வது வெற்றிக்காக டெல்லி அணி காத்திருக்கிறது. இரு அணிகள் மோதிய போட்டியில் பஞ்சாப் 10 ஆட்டத்திலும், டெல்லி 9 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

    ஐதராபாத்தில் இரவு 8 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத்- காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    நடப்பு சாம்பியனான ஐதராபாத் அணி 5 வெற்றி, 3 தோல்வியுடன் 11 புள்ளிகள் பெற்றுள்ளது. ஒரு ஆட்டம் முடிவு இல்லை. கொல்கத்தாவிடம் 17 ரன்னில் அந்த அணி ஏற்கனவே தோற்று இருந்தது.

    இதற்கு ஐதராபாத் அணி பதிலடி கொடுத்து 6-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணியில் கேப்டன் வார்னர், தவான், யுவராஜ்சிங், வில்லியம்சன் போன்ற சிறந்த அதிரடி வீரர்கள் உள்ளனர்.

    2 முறை சாம்பியனான கொல்கத்தா அணி 7 வெற்றி, 2 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்றுள்ளது. ஐதராபாத்தை மீண்டும் வீழ்த்தி ‘பிளேஆப்’ சுற்றுக்கு நுழையும் ஆர்வத்தில் அந்த அணி உள்ளது.

    கொல்கத்தா அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சமபலத்துடன் உள்ளது. கேப்டன் காம்பீர், உத்தப்பா, மனிஷ் பாண்டே, யூசுப் பதான், சுனில்நரீன் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

    இரு அணிகளும் பலம் பொருந்தியவை என்பதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகள் மோதிய போட்டியில் கொல்கத்தா 7 ஆட்டத்திலும், ஐதராபாத் 3 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
    Next Story
    ×