

கரூர்:
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் முதல்கட்ட பிரசாரத்தை தொடங்கிய எடப்பாடி பழனிசாமி திருவாரூரில் முடித்தார். 2-ம் கட்ட பிரசாரத்தை திருத்துறைப்பூண்டியில் தொடங்கி தர்மபுரியில் முடித்தார்.
இதையடுத்து அவர் 3-ம் கட்ட தேர்தல் சூறாவளி சுற்றுப்பயணத்தை இன்று கரூரில் தொடங்கி வருகிற 26-ந்தேதி வரை பிரசாரம் செய்கிறார். அதன்படி கரூரில் இன்று காலை கரூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை ஆதரித்து கரூர் பேருந்து நிலையம் மனோகரா ரவுண்டானாவில் பிரசாரம் செய்தார்.
முன்னதாக கரூர் தொகுதி முன்னாள் எம்.பி.யும், தி.மு.க. மாநில விவசாய அணி செயலாளருமான சின்னசாமி, கரூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற தலைவர் பகவான் பரமேஸ்வர் மற்றும் பல்வேறு மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
பிரசாரத்தின்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
முன் அனுபவம் வாய்ந்த முன்னாள் அமைச்சர் சின்னசாமி இந்த இயக்கத்தில் மீண்டும் சேர்ந்திருப்பது இன்னும் இந்த கழகம் வலுப்பெறும். 12 ஆண்டுகள் அரசியல் வாழ்க்கையை வீணடித்து விட்டதாக சின்னசாமி சொன்னார். நான் அன்றே அண்ணா, அந்த கட்சி சரியில்லை, உண்மைக்கு இடமில்லை. உழைப்புக்கும், தியாகத்திற்கும் இடம் கிடைக்காது என்று சொன்னேன்.
ஏதோ சின்ன பிரச்சினையில் சென்றுவிட்டார். மீண்டும் தாய் கழகமான அ.தி.மு.க.விற்கு வந்துள்ளார். கரூர் மாவட்டம் மட்டுமல்லாமல் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தின் வளர்ச்சிக்கும் சின்னசாமி பங்காற்றினார். அவர் இந்த இயக்கத்திற்கு வந்ததை வரவேற்கிறேன்.
கரூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் எளிமையானவர். ஒரு வீட்டில், ஒரு குடும்பத்தில் ஒருவராக இருந்து கவனிக்க கூடியவர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மிகப்பெரிய இலாகாவான போக்குவரத்து துறையை வழங்கி, அதன் மூலம் நன்மதிப்பை பெற்றுள்ளார்.
அனைவரையும் மதிக்க கூடிய சிறந்த வேட்பாளர். அவருக்கு இரட்டை இலையில் வாக்களித்து மாபெரும் வெற்றியை தேடித்தாருங்கள். அதேபோன்று கிருஷ்ணராயபுரம், குளித்தலை அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்திலும், அரவக்குறிச்சி தொகுதி பா.ஜ.க. வேட்பாளருக்கு தாமரை சின்னத்திலும் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்.
எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இந்த நாட்டு மக்களுக்காக உழைத்த தலைவர்கள். நசுக்கப்பட்ட ஏழை, எளிய கடைக்கோடி மக்களின் வாழ்க்கை ஏற்றத்திற்காக பாடுபட்டார்கள். கண்ணை இமை காப்பது போல மறைந்த முதல்வர் ஜெயலலிதா திட்டங்களை வாரி வாரி வழங்கியதால் இன்றைக்கு இந்தியாவில் தமிழகம் சிறந்த மாநிலமாக இருக்கிறது.
தி.மு.க. ஒரு குடும்ப கட்சி, அது கட்சி அல்ல, கார்ப்பரேட் கம்பெனி. யார் வேண்டுமானாலும், பங்குதாரராக சேர்ந்து கொள்ளலாம். இப்போது செந்தில்பாலாஜி அங்கு பங்குதாரராக சேர்ந்திருக்கிறார். பங்குக்கு ஏற்ற பலனை தருவார்கள். ஆனால் அ.தி.மு.க. அப்படியல்ல. இங்கே நிற்கும் வேட்பாளர்கள் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்கள்.
அவர்களை உயர்ந்த அந்தஸ்துக்கு இந்த இயக்கம் கொண்டு வந்திருக்கிறது. இது உண்மையான ஜனநாயக இயக்கம். யார் உண்மையாக, விசுவாசமாக உழைத்தாலும் உயர்ந்த பதவிக்கு வரலாம். அது அ.தி.மு.க.வில் மட் டுமே நடக்கும். நான் கிளைக்கழக செயலாளராக, ஒன்றிய, மாவட்ட, மாநில பொறுப்பாளராக, எம்.எல். ஏ., எம்.பி.யாக, அமைச்சராக இப்போது உங்கள் ஆதரவுடன் முதல்வராக உங்கள் முன்பு நிற்கிறேன்.
நான் என்றைக்கும் முதல்வர் என்று நினைப்பது கிடையாது. மக்கள்தான் முதல்வர்கள். மக்கள்போடும் உத்தரவை நிறைவேற்றுகிறேன். ஆனால் ஸ்டாலின் தன்னை முதல்வராக நினைத்துக் கொண்டு இருக்கிறார். ஸ்டாலின் முதல்வர் ஆவேன் என்று கனவுதா காணமுடியும். அது ஒரு போதும் நிஜமாகாது.
கடந்த 5 ஆண்டுகளில் 2 சின்னங்களில் செந்தில்பாலாஜி போட்டியிட்டுள்ளார். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டபோது நானும், அமைச்சர் விஜயபாஸ்கரும் அவரது வெற்றிக்காக உழைத்தோம். வீரபாண்டிய கட்டபொம்மனை எட்டப்பன் காட்டி கொடுத்தது போல, அம்மாவின் ஆட்சியை கவிழ்க்க சதி செய்தவர் செந்தில் பாலாஜி. அவரது திட்டம் ஒருபோதும் நிறைவேறாது.
தர்மமும், நீதியும், உண்மையும் வென்றதாகவே சரித்திரம் இருக்கிறது. அதர்மம் வென்றதாக சரித்திரம் கிடையாது. அவர் எத்தனை வேஷம் வேண்டுமானாலும் போடுவார். யாரும் ஏமாந்து விடாதீர்கள். ஆனால் எம். ஆர்.விஜயபாஸ்கர் வெகுளி, நல்ல மனிதர். செந்தில் பாலாஜி இதுவரை 5 கட்சிகளுக்கு மாறியுள்ளார்.
விஜயபாஸ்கர் ஐ.எஸ்.ஐ. முத்திரை என்றால், செந்தில் பாலாஜி டூப்ளிகேட். அரவக்குறிச்சியில் வீடு இல்லாத ஏழைகளுக்கு 3 சென்ட் நிலம் தருவதாக சொல்லிவிட்டு அந்த வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டு, அந்த மக்களையும் கழற்றிவிட்டு இங்கே வந்திருக்கிறார். ஸ்டாலினும் சொந்த பணத்திலாவது நிலம் தருவார் என்று உறுதியளித்தார். எங்கே தந்திருக்கிறீர்கள் ஸ்டாலின்?
ஒரு சென்ட் நிலம் கொடுத்தீர்களா? ஏமாற்றுவதில் நம்பர் ஒன் கில்லாடி செந்தில்பாலாஜி. இனிக்க இனிக்க பேசுவார். கவிழ்ந்து விடாதீர்கள். செந்தில் பாலாஜி ஊழல் செய்த தால்தான் அம்மா அவரை கட்சியில் இருந்து நீக்கினார். ஆனால் மு.க.ஸ்டாலின் அவர் கட்சிக்கு சென்றதும் மாவட்ட செயலாளர் ஆக்கி, வேட்பாளராகவும் ஆக்கியுள்ளார்.
மு.க.ஸ்டாலினை பற்றி செந்தில்பாலாஜி என்ன வெல்லாம் பேசியிருக்கிறார் என்று சட்டமன்ற அவைக்குறிப்பில் இருக்கிறது. இப்போது அவர்தான் அந்த கட்சியின் வேட்பாளர். இந்த உண்மையை எல்லாம் நீங்கள் வாக்காளர்கள் மத்தியில் கொண்டு சேர்க்கவேண்டும். இவையெல்லாம் நாட்டு மக்களுக்கு தெரிந்தாலே அவரை டெபாசிட் இழக்க செய்வார்கள்.
அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பல்லாயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். தி.மு.க.வினர் சந்தர்ப்பவாதிகள், அவர்களுக்கு கொள்கைகளோ, கோட்பாடுகளோ கிடையாது. கரூர் சட்டமன்ற தொகுதி மக்களின் கோரிக்கை மற்றும் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் கோரிக்கையால் ரூ.306 கோடியில் 150 மாணவ, மாணவிகள் படிக்க கூடிய ஆயிரம் படுக்கை வசதிகள் கொண்ட கரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை பிரமாண்டமாக கட்டி முடித்திருக்கிறோம். அ.தி.மு.க. ஆட்சியில் எதுவும் நடக்கவில்லை என்று ஸ்டாலின் சொல்கிறார். இந்த மருத்துவக்கல்லூரியை பிரமாண்டமாக கட்டி திறந்துவைத்த அரசு அம்மாவின் அ.தி.மு.க. அரசு.
கரூரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சேலம் புறவழிச்சாலையை இணைக்கும் அம்மா சாலை ரூ.21 கோடியில் நிறைவேற்றப்பட்டுள்ளது. பெரியகுளத்துபாளையம், பசுபதிபாளையம் போன்ற இடங்களில் குகை வழி பாதைகள் ரூ.11 கோடியில் அமைக்கப்பட்டது.
கரூர் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது. ரூ.6 கோடி மதிப்பில் ரெட்டை வாய்க்கால் பகுதியில் பணிகள் நடந்து வருகிறது. ரூ.9.3 கோடியில் குப்பைகளை தரம் பிரிக்கும் பணி நடந்து வருகிறது. கரூர் தொழில் நிறைந்த நகரம். அதற்கு தடையில்லா மின்சாரம் அம்மா அரசு வழங்கி வருகிறது.
சென்னையில் எனது தலைமையில் ரூ.3 லட்சத்து 500 கோடியில் 304 தொழில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முடியும் தருவாயில் நேரடியாக 5 லட்சம் இளைஞர்களுக்கும், மறைமுகமாக 5 லட்சம் இளைஞர்களுக்கும் என 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
ஆட்சியில் இல்லாத போதே ஸ்டாலினும், உதயநிதியும் அதிகாரிகளை மிரட்டி வருகிறார்கள். அவர்கள் ஆட்சிக்கு வந்தால் அதிகாரிகளும், மக்களும் படாதபாடு படுவார்கள். கட்டப்பஞ்சாயத்து செய்யும் தலைவர் நாட்டை ஆள நினைக்கலாமா? தி.மு.க என்றால் அராஜகம், கட்டப்பஞ்சாயத்து கட்சி என்பது அனைவருக்கும் தெரியும்.
தேர்தல் அறிக்கையை முழுமையாக நிறைவேற்றும் கட்சி என்றால் அது அ.தி.மு.க. ஒன்றுதான்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதையடுத்து அவர் அரவக்குறிச்சி தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து பிரசாரம் செய்தார். தொடர்ந்து அங்கிருந்த திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் புறப்பட்டு சென்றார்.