

10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி தொடர் வருகிற 28-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான பயிற்சியை நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தொடங்கியது.
அந்த அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி உள்ளிட்ட வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். பயிற்சியின் போது அணி வீரர்களிடம் கோலி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த ஆண்டு நாம் சாதித்ததை அடைவதற்காக, கடந்த 2 அல்லது 3 சீசன்களாக நாம் கடுமையாக உழைத்தோம். இனி வரும் நாட்கள் இன்னும் சவாலானதாகவே இருக்கும்.
ஏனென்றால் மற்ற அணிகள் நம்மை வீழ்த்த வேண்டும் என்று தீவிரத்துடன் களமிறங்குவார்கள். எனவே நாம் எப்போதும் ஒரு படி முன்னிலையிலேயே இருக்க வேண்டும். இப்போதே முழு உத்வேகத்துடன் தயாராகுங்கள்.
நாம் பங்கேற்கும் ஒவ்வொரு பயிற்சி அமர்விலும் ஒரு நிமிடம் கூட வீணாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த 2½ மாதங்களுக்கும் நாம் நமது முழுத் திறனையும் 120 சதவீதம் வெளிப்படுத்த வேண்டும்.
சவால்களை எதிர்கொள்ள நீங்கள் மிகுந்த உற்சாகத்துடன் இருக்கிறீர்கள் என்பதை உங்கள் அனைவரின் முகங்களிலும் என்னால் காண முடிகிறது என்றார்.
இதற்கிடையே இந்திய அணி முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறும்போது, பெங்களூரு அணி அடுத்த 2 ஆண்டுகளில் ஐ.பி.எல் கோப்பையை வெல்லும் வலிமையுடன் இருக்கிறது.
ஐ.பி.எல் கோப்பையை வெல்வது எளிதல்ல. ஆனால் அவர்களிடம் உள்ள அடிப்படைக் கட்டமைப்பு, முன்னணி வீரர்களுக்கு நிகரான மாற்று வீரர்கள் இருப்பது உள்ளிட்டவைகள் பெங்களூரு அணிக்கு பலமாக உள்ளது. அந்த அணி தங்களது குறைகளை சரிசெய்த விதம் மூலம் முதல் 2 இடங்களுக்குள் வர நல்ல வாய்ப்பு உள்ளது என்றார்.